சுகாதாரத்துறையின் ஆலோசனைகளை மீறி மக்களை ஆபத்துக்குள் தள்ளாதீர்கள்

சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு

நாட்டின் சுகாதார துறையினரின் ஆலோசனைகளை புறம்தள்ளி கோட்டாபய அரசு தேர்தலுக்காக மக்களை ஆபத்தில் தள்ளப் போகின்றதா எனக் கேள்வி எமுப்பியுள்ள ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தேர்தலுக்காக மக்களை ஆபத்துக்குள் தள்ளிவிடாதிர்கள் எனவும் கேட்டுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். மேலும் கூறுகையில், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக சுகாதார திணைக்களத்தின் அறிவுரைகளை கேட்காமல் அரசாங்கம் தேர்தலை நடத்துவதற்காக அவசரமாக செயற்பட்டு வருகின்றது.

இது மக்களுக்கு பாதாகத் தன்மையை ஏற்படுத்தலாம் என்றே அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இது மக்களுக்கு பாரிய விளைவுகளை உருவாக்கலாம்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தலானது தொடர்ச்சியாக நாட்டில் இருப்பதாக சுகாதாரத் துறையினர் கூறுகின்றனர்.

எனினும் அரசாங்கம் அவர்களின் கருத்துக்களை செவிமடுக்காது தேர்தலை நடத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகின்றது. இது மக்களுக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

நடைபெறவுள்ள தேர்தலானது ஜனநாயகமாக  நடைபெறுமா? என்ற கேள்வி உள்ளது. ஏனெனில் கருத்து சுதந்திரம் வெளியிட முடியாத வகையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. தேர்தல் காலங்களில் மக்களுக்கு தமது கருத்துக்களை பகிர அரசியல் கட்சிகளுக்கு சந்தர்ப்பங்கள் வழங்க வேண்டும் என்றார்.

பருத்தித்துறை விசேட நிருபர்

Tue, 04/21/2020 - 09:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை