படையினர் தங்குவதற்கே பாடசாலைகள் பயன்படுத்தப்படுகின்றன

படையினர் தங்குவதற்கே பாடசாலைகள் பயன்படுத்தப்படுகின்றன-Using School For Quarantine Not True-Rtd Major General Kamal Gunaratne

- தனிமைப்படுத்தல் முகாம்களாக பயன்படுத்தப்படவில்லை
- அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி அரசியல் இலாபம் தேட முயற்சி

முப்படையினரை தனிமைப்படுத்துவதற்காக அரசாங்க பாடசாலைகளை தனிமைப்படுத்தும் நிலையங்களாக நிறுவ படையினர் முயற்சித்து வருவதாக வெளிவந்துள்ள செய்தி ஆதாரமற்றதென பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.

இச்செய்தி உண்மைக்குப் புறம்பானதென மறுத்துள்ள பாதுகாப்பமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண, பாடசாலைகள் தனிமைப்படுத்தல் நிலையங்களாகவன்றி முப்படையினரை தங்க வைப்பதற்கான மேலதிக முகாமாகவே பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

நாட்டில் எற்பட்டிருக்கும் அசாதாரணச் சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேட முனைவது தார்மீகமாகாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் விளக்கமளிப்பதற்காக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது-

முப்படையினரின் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக தனிமைப்படுத்தல் நிலையங்களை பாடசாலைகளில் நிறுவுமாறு பாதுகாப்பு அமைச்சு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அறிவுறுத்தல் விடுக்கவில்லை.

தனிமைப்படுத்தல் நிலையங்களை நிறுவுவதற்காக படையினர் அரசாங்கப் பாடசாலைகளை தேர்ந்தெடுத்திருப்பதாக சிலர் தெரிவிக்கும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை. எந்தவொரு பாடசாலையும் படையினரின் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படவில்லை. எனினும் அவை படையினரின் மேலதிக முகாம்களாக பயன்படுத்தப்படலாம்.

முப்படையினரதும் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டு அவர்களை உடனடியாக முகாம்களுக்கு திரும்புமாறு நாம் பணிப்புரை விடுத்ததையடுத்து முகாம்களிலுள்ள படையினரின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் விமானப்படையினரை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான போதிய இடவசதி முகாம்கள் மற்றும் படைத்தளங்களில் இல்லாததாலும் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு சமூக இடைவௌி மற்றும் சுத்தம் அத்தியாவசியம் என்பதனாலும்

முப்படையினரை முகாம்கள் சார்பில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் பாதுகாப்பாக தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளை கல்வியமைச்சுடன் இணைந்து முன்னெடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற வகையில் நானே முப்படைகளின் தளபதிகளுக்கு பணிப்புரை விடுத்தேன்.

சுகாதார அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தற்போது நாட்டில் 54 தனிமைப்படுத்தல் நிலையங்கள் இராணுவத்தினரால் நடத்தப்பட்டு  வருகின்றன. நேற்று வரை 3,292 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 4,526 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை பூர்த்தி செய்து தாம் சுகதேகியாக இருப்பதற்கான சான்றிதழ்களுடன் தனிமைப்படுத்தல் நிலையங்களை விட்டு வெளியேறி தமது வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாமென சந்தேகிக்கப்படும் முப்படையினரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். பாடசாலைகளில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள படையினர் முகக்கவசம் மட்டுமே அணிந்துள்ளனர்.

அவர்கள் தனிமைப்படுத்தும் நிலையங்களில் உள்ளவர்களைப் போன்று தம்மை முற்றாக மறைக்கும் பாதுகாப்பு அங்கியை அணிந்திருக்க வில்லை.அதனால் இவ்வாறானதொரு சூழ்நிலையில் அரசியல் இலாபம் தேடுவதற்காக ஆதாரமற்ற தகவல்களை  வெளியிடுவது தார்மீகம் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Thu, 04/30/2020 - 11:53


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை