தாக்குதலில் மரித்தவர்களை நினைவுகூர முடியாதது வேதனைக்குரியது

கல்முனை தேவாலய போதகர் கிருபைராசா

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் மரித்தவர்களின் ஓராண்டு நிறைவை நினைவுகூர முடியாதது வேதனைக்குரியது என கல்முனை தேவாலய போதகர் எஸ்.கிருபைராசா தெரிவித்தார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதலின் ஓராண்டு பூர்த்தியையொட்டி அவர் மேலும் கூறியதாவது;

மக்களைப்பொறுத்தவரை இன்னும் பய பீதியில் தானுள்ளனர். தேவாலயத்தில் கூடுகின்றபோது மற்றுமொரு தாக்குதல் இடம்பெற்றுவிடுமோ என்று அஞ்சுகின்றனர்.

ஓராண்டு நிறைவின் பின்னர் மற்றுமொரு தாக்குதல் சம்பவத்திற்கு திட்டமிட்டுள்ளது அம்பலத்திற்கு வந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார்.

ஏலவே பல நூறு உயிர்களைப் பலிகொடுத்து அந்த ரணகளம் ஆறுமுன்பு மற்றுமொன்றா என்று அவர்கள் மேலும் பீதியடைந்துள்ளனர்.

அந்தவேதனைகளை வலிகளை சுமந்திருக்கின்ற அதேவேளை ஓராண்டு நிறைவு நினைவு நிகழ்வுகளை மனத்தின்படி ஆலயத்தில் நடாத்துமடியாத துர்ப்பாக்கியநிலை நிலவுவது மேலும் வேதனையளிக்கின்றது.

சம்பவம் இடம்பெற்று ஒரு வருடமாகின்றபோதிலும் இன்னும் அரசாங்கம் நீதியான தீர்வினைத் தரவில்லை என்பது வேதனையாகவுள்ளது. இன்னும் உரிய தரப்பினரைக் கண்டுபிடிக்கவுமில்லை. தண்டனை வழங்கவுமில்லை.

இந்தவாரத்தில் மட்டும் ஒப்புக்கு ஓரிருவரைக் கைது செய்துள்ளனர்.

கடந்தஆட்சிக்காலத்தில் இத்தாக்குதல் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட தேவாலயங்கள் மற்றும் சிலவீடுகள் திருத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. காட்டிக்கொடுத்த சிலருக்கு பாராட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதுதவிர தாக்குதல் நடாத்தியவர்கள் கைதுசெய்யப்பட்டு நீதியான விசாரணை நடாத்தி சட்டத்தின் முன்நிறுத்தப்படவில்லை. கிறிஸ்தவ சமுகத்தை திருப்திப்படுத்தும்வகையில் எவ்வித பரிகாரமும் மேற்கொள்ளப்படவில்லையென்பது கவலைக்குரியது.

அதனிடையில் இதனை இனவாத கண்ணோட்டத்தில் பார்க்கத் தலைப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கான சூத்திரதாரிகள் சம்பந்தப்பட்டவர்கள் எந்தச் சாதியாகவிருந்தாலும் எந்த மதத்தினராகவிருந்தாலும் சட்டத்தின்முன் சமமானவர்கள். அவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள்.

எனவே இதுவிடயத்தில் இன மத ரீதியிலான பார்வை அவசியமில்லை.

எனவே ஓராண்டு கழிந்த பின்பாவது பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ சமுகம் திருப்பதியடையும் வண்ணம் அரசாங்க உரிய நடவடிக்கையை மேற்கொளள்ளவேண்டும் என்பது ஆதங்கமாகும் என்றார்.

அதேவேளை காரைதீவு எய்ம்ஸ் தேவலயத்தின் போதகர் வண. கிறிஸ்தோபர் கூறுகையில்,

அந்த்த் தாக்குதலை எமது மக்கள் இன்னும் மறக்கவில்லை. அவர்கள் மனங்களிலிருந்து அதனை எளிதில் அகற்றிவிடமுடியாது. ஆழப்பதிந்துள்ளது. அவர்கள் மரித்த வேதனை துன்பம் துயரம் ஒரு புறம் அதன்ஓராண்டு நினைவு நிகழ்வைக்கூட நடாத்த முடியாதது மற்றுமொரு துன்பியல் நிகழ்வாகும்.

மட்டு.தேவலாயத்தில் குண்டுத்தாக்குதலுக்கிலக்காகி அண்மையில் மரணித்த ஒரு சகோதரியுடன் மொத்தமாக 31பேர் மரணித்திருப்பது தெரிந்ததே.

இன்று நாம் அம்பாறை மாவட்டத்திலிருந்து சீயோன் தேவாலயத்திற்குச் சென்று மரித்த ஆறுபேர் சார்பில் நினைவுகூரும் நிகழ்வை நடாத்த்த் திட்டமிட்டிருந்தோம்.

எனினும் ஆண்டகையின் வேண்டுகொளுக்கமைவாகவும் கொரோனா நிலை காரணமாகவும் அதனைச் செய்யவில்லை.

எது எப்படியிருப்பினும் இன்றைய நாள் எமது வாழ்வில் மறக்கமுடியாது என்பது மட்டும் உண்மையென்பதை பலத்த வலிகளுடனும் வேதனைகளுடனும் தெரிவிக்கிறேன் என்றார்.

காரைதீவு குறூப் நிருபர்

Wed, 04/22/2020 - 10:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை