ஆயிரம் ரூபா சம்பளம் விவகாரத்தில் தொழிலாளர்கள் ஏமாற்றம்

ஆயிரம் ரூபா சம்பள விவகாரத்தில் அரசாங்கம் தொழிலாளர்களை ஏமாற்றியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளருமான  பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.

ஹட்டனில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாட்டிலுள்ள அரசுத்துறை தனியார் துறை, சமுர்தி பயனாளிகள், வயோதிபர்கள், வேலை இல்லாதவர்கள் என அனைவருக்கும் அரசாங்கம்  கொடுப்பனவுகளை வழங்கி வருகின்ற போதிலும் இதுவரையும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித கொடுப்பனவும் பெற்றுக் கொடுக்கப்படவில்லை.

கடந்த காலங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு பெற்றுத்தரப்படும் என்றும் ஏப்ரல் 10ஆம் திகதி முதல் இத்தொகை வழங்கப்படும் என்றும் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது.

1000 ரூபா வழங்கப்படுமென அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் வாக்குறுதியளித்த போதிலும், 1000 ரூபா சம்பளம் வழங்கப்படவில்லை.

தோட்டங்களில் வறட்சி காரணமாக தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை.

இதனால் தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். தொழிலாளர்களுக்கு வாரத்தில் ஓரிரு நாட்கள் மாத்திரம் வேலை வழங்கப்படுவதால் அவர்கள் போதிய சம்பளம் இன்றி வாழ்வாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர் என்றார்.

(ஹட்டன் விசேட நிருபர்)

Fri, 04/17/2020 - 09:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை