புதுவருடத்திற்கான மருத்துநீரை வீட்டுக்குவீடு விநியோகிக்க முடிவு

சகல ஆலயங்களுக்கும் பூட்டு: காரைதீவு கொரோனா வழிகாட்டற் குழு கூட்டத்தில் தீர்மானம்

சார்வரி புதுவருடப்பிறப்பை இம்முறை மக்கள் வீடுகளில் மட்டுப்படுத்தப்பட்டஅளவில் கொண்டாடவேண்டும் எனஅரசாங்கம் அறிவித்துள்ளது. அதற்கிணங்க புதுவருடத்தின் முதல் பாரம்பரிய சடங்காக திகழும் மருத்துநீரையும் குறித்த இலைகளையும் பொதிசெய்து துண்டுப்பிரசுரத்தையும் வீடுவீடாக விநியோகிக்க ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறான தீர்மானமொன்று காரைதீவு பிரதேச கொரோனா வழிகாட்டற்குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டம் நேற்று பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் தலைமையில் பிரதேச செயலக மேல்தள கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் கல்முனைப் பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் குண.சுகுணன் மற்றும் பல அதிகாரிகள் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் அன்றையதினம் சகலஆலயங்களும் பூட்டப்படும். ஆலயக்குருக்கள் மட்டுமே ஆலயத்தினுள்சென்று பூஜை செய்யஅனுமதிக்கப்படுவார். எனவே யாரும் புதுவருடத்தையொட்டி ஆலயத்திற்கு செல்லவேண்டிய தேவையில்லை. வீட்டிலிருந்துகொண்டு கொண்டாடலாம். நாட்டின் நலன்கருதியும் மக்களின் நலன்கருதியும் இவற்றை மக்கள் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

மருத்துநீரைத் தயாரிக்க நான்கு ஆலயங்களுக்கு அனுமதி வழங்குவது என்றும் அங்கிருந்து பொதிகள் செய்யப்பட்டு அந்தந்த கிராமசேவை உத்தியோகத்தர்கள் மற்றும் தொடர்புபட்ட அலுவலர்கள் ஊடாக வீடுவீடாக அவற்றை விநியோகிப்பது என்றும் தீர்மானமாகியது.

எனவே மக்கள் மருத்துநீருக்காக வெளியேவர வேண்டிய தேவையில்லை.

காரைதீவு மாளிகைக்காடு கடலோர மீன்விற்பனை நிலையத்தில் விற்பனைசெய்ய 13பேருக்கு பிரதேசசபையின் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அவர்களில் 2பேர் வெளிமாவட்ட மீன்களைக் கொண்டுவர காரணமாயிருந்தவர்கள் என்பதால் அவர்களது வியாபார உரிமம் ரத்ததாகியுள்ளது. எனவே மீதி 11 மீன்விற்பனையாளர்களும் மொத்தவியாபாரம் செய்யலாம். ஆனால் வெளிமாவட்ட மீன்களை எந்தக்காரணம்கொண்டும் வரவழைக்கவோ விற்பனைசெய்யவோ அனுமதியில்லை. மீறினால் உரிமம் ரத்தாக்கப்படுவதுடன் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்.

காரைதீவிலிருந்து தற்போது முடக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று பிரதேசத்திற்கு 28 பேர் அரச தொழிலுக்காக சென்று வருபவர்கள். அவர்களில் 21பேர் அக்கரைப்பற்று நகர சபையில் பணியாற்றுபவர்கள். அவர்கள் தொடர்பாக சுகாதாரத்துறையினர் உரிய நடவடிக்கையை எடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.

தனிமைப்படுத்தல் தொடர்பிலான ஸ்ரிக்கர் குறித்த வீடுகளுக்கு ஒட்டப்படுதலை உறுதிப்படுத்தல்.

தொடர்ச்சியாக பிரதேசசெயலகம் பிரதேசசபை சுகாதார திணைக்களத்தினர், பொலிசார், பாதுகாப்புத்துறையினர் இணைந்து தீர்மானங்களை எடுத்து செயற்படுத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

(காரைதீவு குறூப் நிருபர்)

Sat, 04/11/2020 - 10:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை