தேர்தல் ஆணையாளரின் மீது அழுத்தம் பிரயோகிக்க கூடாது

தேர்தல் ஆணையாளரின் மீது தற்போதைய அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

வெளிவரும் ஊடக செய்திகளின் அடிப்படையில் தேர்தல் ஆணையாளர் கடுமையான அரசியல் அழுத்தத்துக்கு உட்பட்டுள்ளதை மக்களால் விளங்கிக்கொள்ள கூடியதாகவுள்ளது. தேர்தல் ஆணையாளர் வரப்போகும் அனர்த்தங்களை புரிந்து கொண்டு அரசியல் யாப்புக் குழப்பங்கள் ஏற்படாத வகையில் உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளுமாறு அரசுக்கு எழுத்து மூலமான கோரிக்கையை விடுதிருந்தார்.

அதற்கு ஜனாதிபதியின் சார்பாக பதிலளித்த செயலாளர், அரசியல் யாப்பு வியாக்கியானங்களை தெரிவித்து தேர்தலை நடத்துவதற்குரிய வகையில் எழுத்து மூலமான பதிலை வழங்கியிருந்தார். தற்போதைய அபாய சூழலை புரிந்து கொள்ளாத அரசின் அமைச்சர் உட்பட பலர் தேர்தலை நடத்த முடியும். அதற்கான பொறுப்பு தேர்தல் ஆணையாளரிடமே உள்ளது என அழுத்தங்களை பிரயோகித்து இருந்தனர்.

நாட்டில் கொரோனா நீங்கி விட்டதை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான ஜனாதிபதி செயலணி நாட்டு மக்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும். அதுவே ஒட்டுமொத்த கொரோனா அழிப்பு செயலணியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஜனாதிபதிக்கு பொருத்தமான செயற்பாடாக அமையும்.

எனவே தற்போதுள்ள சூழல் மிகவும் பயங்கரமான நிலமை என்பதை அரசு அறிந்து கொண்டும் உலக நாடுகளில் ஏற்பட்ட கொரோனா அனர்த்தங்களை விளங்கிக் கொண்டும் செயற்பட வேண்டும்.

சீன நாட்டில் வூகான் மாநிலத்தில் வைத்தியர்களால் எச்சரிக்கை செய்யப்பட்ட போதும் கூட அதில் அசட்டை காட்டிய சீன அரசு பாரிய பாதிப்பிற்குள்ளாகியது.

இத்தாலிய நாட்டில் அரசின் அறிவுறுத்தல்களை உதாசினம் செய்த மக்கள் கொத்துக் கொத்தாக இறக்க நேர்ந்து இறுதியில் மருத்துவ சேவை முழுதும் முடங்கியது.

அமெரிக்காவில் 100 பேர் கொரோனாவில் இறந்த பொழுது ஊடகவியலாளரால் எச்சரிக்கை செய்யபட்டது. அதை உதாசீனம் செய்தார் அமெரிக்க ஜனாதிபதி டரம்ப்.

அதனால் 30 ஆயிரத்திற்கு மேல் அமெரிக்க மக்களை பலி கொடுத்து பதிலளிக்க முடியாமல் திண்டாடி வருகிறார். இலங்கையில் கொரோனா கோர தாண்டவத்திற்கு எமது மக்களை பலி கொடுக்க மக்கள் பிரதிநிதிகளான நாங்கள் அனுமதிக்க முடியாது.

இறுதியில் இலங்கையில் சுகாதார சேவைகள் முடக்கப்பட்டு கொத்துக் கொத்தாக மக்கள் பலியாகும் நிலை ஏற்பட்டால் அந்த அனர்த்தத்திற்கு காரணம் கூறாமல் முன் எச்சரிக்கையாக இவ் அரசும் தேர்தல் திணைக்களமும் நடந்து கொள்ள வேண்டும். மக்களது சுமுகமான வாழ்க்கை 100 வீதம் வழமைக்கு திரும்பும் வரை தேர்தலை மக்களுக்குள் திணிக்க கூடாது என்றார்.

வவுனியா விசேட நிருபர்

Tue, 04/21/2020 - 09:57


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை