பேருவளை: பன்னில, சீனன்கோட்டை பகுதிகள் தனிமைப்படுத்தலில்

பேருவளை - பன்னில, சீனன்கோட்டை பகுதி தனிமைப்படுத்தலில்-Beruwala China Fort Isolated-COVID19

சில ஊடகங்கள் இனவாதம் பரப்புவதாக பேருவளை மக்கள் குற்றச்சாட்டு

பேருவளையில் உள்ள பன்னில மற்றும் சீனன்கோட்டை கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்புக் கருதி இப்பகுதிகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பன்னில பகுதி ஏற்கனவே முற்று முழுதாக மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது சீனன்கோட்டை பகுதியும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குட்டிமலை பகுதியில் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, பேருவளை பகுதியில் இது வரை 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில், சாரதியாக பணிபுரியும் குறித்த பகுதியிலிருந்த இளைஞர் ஒருவர், இந்தோனேஷியாவிலிருந்து வந்த பயணிகள் சிலரை வாகனமொன்றில் விமான நிலையத்திலிருந்து அழைத்து வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்தே, நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இவ்வேளையில் சமூக அக்கறை கொண்ட இளைஞராக அடையாளப்படுத்தப்படும் குறித்த இளைஞர் உள்ளிட்ட குழுவினர் அப்பகுதியில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அதன் பின்னரே இவருக்கு கொரோனா வைரஸ் தொடர்பான அறிகுறிகள் தென்பட்டுள்ளதோடு, அவர் பின்னர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை திரிபுபடுத்தி, ஒரு சில இனவாதம் கொண்ட ஊடகங்கள்  அவர் கொரோனா வைரஸை பரப்பி வந்துள்ளதாக தெரிவித்ததாகவும், அவ்வாறான ஊடகங்கள் சிறுபான்மை சமூகத்தை தொடர்ந்தும் காயப்படுத்தி வருவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றை, ஊரடங்கு காலத்தில் இடம்பெற்றதாக அவ்வூடகங்கள் காண்பித்து, அது பின்னர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹணவினால் பொய் என நிரூபிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கொவிட்19 நோயாளிகள் பதிவானதைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட பண்டாரகம, அட்டுலுகம ஆகிய பகுதிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Tue, 04/14/2020 - 10:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை