வீடுகளுக்கு பொருட்கள் விநியோகம்; பொலிஸ் வழிகாட்டல்கள்

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது நிலவி வரும் சூழ்நிலையில், Online மூலம்  உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் நடமாடும் விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக, பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

சுகாதார முறையில் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை கவனத்திற்கொண்டு நடமாடும் வியாபாரிகள் பின்பற்ற குறித்த நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நடமாடும் வியாபாரிகள் வியாபாரத்திற்கு ஏற்ற வகையில் சுத்தமான ஆடைகளை அணிந்திருப்பதோடு,  பாதங்களை மறைக்கும் வகையில் பாதணிகள் அணிந்திருக்க வேண்டும்.

அவர்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் வேளைகளில் முகக் கவசங்கள் மற்றும் கையுறைகளை அணிந்திருக்க வேண்டும்.

பேக்கரி தயாரிப்புகள், சமைத்த உணவுகளை விற்பனை செய்யும்போது, அவற்றை நேரடியாக கைகளினால் பிடிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

அத்தோடு,  உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய வரும் பொதுமக்கள் உணவுகளை தொடுவதற்கு இடமளிக்கக் கூடாது  என்பதோடு, இரு தரப்பினர்களுக்கு இடையிலும் ஒரு மீற்றர் தூரமான சமூக இடைவெளியை பேண வேண்டும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Online முறை மூலம் விற்பனையில் ஈடுபடும் நடமாடும் வியாபாரிகள் குறித்த நடைமுறைகளை பின்பற்றுவது அவசியமாகும் எனவும், குறித்த நடைமுறைகளை பின்பற்றத் தவறும் வியாபாரிகளினது ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

 

Wed, 04/22/2020 - 11:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை