நுவரெலியாவில் அரிசி தட்டுப்பாடு; வியாபாரிகள் சங்கம் எச்சரிக்கை

நுவரெலியாவில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது.அரசாங்கம் உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் நிலைமை மிகவும் மோசமடையும் என நுவரெலியா ஒன்றிணைந்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் டக்ளஸ் நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,

நுவரெலியா ஒன்றணைந்த வியாபாரிகள் சங்கத்தின் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் வர்த்தகர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.இதன்போது வர்த்தகர்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.தற்பொழுது அரசாங்கம் அரிசிக்காக நிர்ணய விலை ஒன்றை தீர்மானித்துள்ளது இது தொடர்பாக ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள் குறித்து கடிதம் ஒன்றை நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் எங்களை பலமுறை அழைத்து தாங்கள் நடத்திய கலந்துரையாடலின் பயனாக நாங்கள் எங்களால் முடிந்த அளவு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொடுத்தோம். அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நிறுவனங்களுக்கும் எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்த நகரை நோக்கி வருகின்ற மக்களுக்கு எங்களால் முடிந்த அளவில் சேவைகளை வழங்கி இருக்கின்றோம் அதில் ஒரு சில குறைபாடுகள் சில நேரங்களில் நடந்து இருப்பதையும் நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம்.

எது எப்படியாக இருந்த போதிலும் தற்பொழுது அரிசி பால் மா மிளகாய்த்தூள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் எங்களுடைய கையிருப்பில் மிகவும் குறைவாகவே இருக்கின்றது என்பதை தங்களுடைய கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

இவ்வாறான ஒரு நிலையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப் படுகின்ற பொழுது அரிசி விற்பனை செய்வதில் பல்வேறு சிரமங்களை நாங்கள் எதிர்நோக்கி வருகின்றோம் மேலும் அடைக்கப்பட்ட மீன்வகை சிவப்பு பருப்பு போன்றவை விற்பனைக்காக இல்லை என்பதையும் உங்களுடைய கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். அந்த பொருட்களை நிர்ணய விலையில் நாங்கள் விற்பனை செய்து இருக்கின்றோம் ஆனால் அதற்கு மாற்றீடாக இதுவரையில் எந்த விதமான செயல்பாடுகளும் முன்னெடுக்கப்பட வில்லை. அத்தோடு அந்த நட்டத்தை ஈடு செய்வதற்கும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்பதையும் உங்களுடைய கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

எவ்விதமான இடையூறுகளும் இல்லாமல் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அரிசியை விற்பனை செய்ய வேண்டுமாக இருந்தால் விற்பனை விலையில் இருந்து 5 வீதம் குறைவான விலைக்கு அரிசியை பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாக இருந்தால் நாங்கள் நிர்ணய விலையில் அரிசியை விற்பனை செய்வதற்கு தயாராக இருக்கின்றோம். அரசாங்கம் தற்பொழுது மரக்கறி கொள்வனவு செய்து பகிர்ந்து அளிப்பது போல அரிசியையும் எங்களுடைய வியாபார ஸ்தாபனங்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியுமாக இருந்தால் நிர்ணய விலையில் விற்பனை செய்வதில் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை என்பதையும் உங்களுடைய கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

இந்த நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கத் தவறும் பட்சத்தில் எதிர்வரும் வாரங்களில்  அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தற்பொழுது எங்களுடைய கையிருப்பில் இருக்கின்ற அரிசி 98.00 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது இதிலும் மிகவும் குறைவான தொகையே எங்களிடம் இருக்கின்றது. எனவே தங்களுடைய மேலான பதிலை தொடர்ந்து அரிசியை கொள்வனவு செய்வதா? இல்லையா? என்ற தீர்மானத்திற்கு நாங்கள் வர வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி இருக்கின்றோம்.

எனவே அரிசியை முறையாக வர்த்தகர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் அதனை நிர்ணய விலையில் விற்பனை செய்வது என்பது முடியாத காரியமாகும் ஏற்கனவே பருப்பு மற்றும் டின்னில் அடைக்கப்பட்ட மீன் வகைகளை நிர்ணய விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என அரசாங்கம் விடுத்த அறிவித்தலை தொடர்ந்து தற்போது அது அனேகமான மக்களுக்கு கிடைக்காமல் போய் இருப்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் எனவே இது தொடர்பாக தெளிவான முறையான ஒரு நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க முன்வரவேண்டும் என இந்த கடிதம் மூலமாக தெரிவித்துக் கொள்கிறோம் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரீ. சுப்ரமணியம் - நுவரெலியா நிருபர்

Wed, 04/15/2020 - 13:53


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை