ஊரடங்கு தளர்வுடன் அநேக பிரதேசங்களில் இயல்பு வாழ்க்கை வழமை நிலைக்கு திரும்பியது

மட்டுப்படுத்தப்பட்ட ரயில், பஸ் சேவைகள்

ஊரடங்குச் சட்டம் நேற்று கூடுதலான நேரம் தளர்த்தப்பட்ட நிலையில் நாட்டின் அநேக பிரதேசங்களில் இயல்பு வாழ்க்கை படிப்படியாக வழமை நிலைக்கு திரும்பியிருந்ததாக அறிவிக்கப்படுகிறது.

ஏனைய நாட்களைப் போல்  பிரதான  நகரங்களில்  சன நெரிசலோ அத்தியாவசியப் பொருட்களுக்கான நீண்ட வரிசையோ காணப்படாதது விசேட அம்சமாகும்.

ஒருமாத காலத்திற்கு மேலாக நீடித்த ஊரடங்குச் சட்டம் கொழும்பு, கம்பஹா,களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நேற்று 15 மணி நேரம் தளர்த்தப்பட்டது.இந்த நிலையில் ரயில் மற்றும் பஸ் சேவைகளும் இம் மாவட்டங்களிடையே நடைபெற்றதோடு அரச மற்றும் தனியார் அலுவலகங்களையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் ஊழியர்களின் வருகை மிகக் குறைவாகவே காணப்பட்டதோடு பொதுப் போக்குவரத்துகளில் குறைந்தளவான மக்களே பயணித்ததாக அறிய வருகிறது.

நாட்டில் கொரோனா தொற்று பரவும் அச்சம் காரணமாக கடந்த மார்ச் 20 முதல் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அதிகம் நோய் பரவும் அச்சமுள்ள மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களில் இடைக்கிடை ஊரடங்கு தளர்த்தப்பட்டன. இக்காலப்பகுதியில் சகல அரச அலுவலகங்கள், பாடசாலைகள்,பல்கலைக்கழகங்கள், தனியார் அலுவலகங்கள் யாவும் மூடப்பட்டிருந்ததோடு முழு நாடும் முடக்கப்பட்டிருந்து. இதனால் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டதோடு அத்தியாவசிய சேவைகள் மாத்திமே முன்னெடுக்கப்பட்டன.

அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து பணியாற்ற சில தினங்கள் அறிவிக்கப்பட்டதோடு அத்தியாவசியமான ஊழியர்களை மாத்திரம் கொண்டு அலுவலகங்களை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் நாடளாவிய  ஊரடங்கு அமுலுடன் இந்த செயற்பாடுகள் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை என அறிய வருகிறது.

இக்காலப்பகுதியில் கொரேனா தொற்றிய சுமார் 300 பேர் வரை அடையாளங் காணப்பட்டதோடு 7 பேர் உயிரிழந்தார்கள். தற்பொழுது நிலைமை சுமூகமடைந்து வருவதாக சுகாதார தரப்பு அறிவித்துள்ள நிலையில் நேற்று முதல் வழமையை விட கூடுதல் நேரம் ஊரடங்கை தளர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. அரச மற்றும் தனியார் அலுவலகங்களை குறைந்தளவு ஆளணியுடன் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்காக ஊரடங்கு தளர்த்தப்பட்ட மாவட்டங்களிடையே போக்கு வரத்து சேவைகளும் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றி போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் இவற்றில் குறைந்தளவானவர்களே பயணித்ததோடு கிராமப்பகுதிகளில் இருந்து நகரங்களுக்கு வருவதற்கான பஸ்களில் கூடுதல் நெரிசல் காணப்பட்டதாக அறிய வருகிறது. இவ்வாறு விதிமுறைகளை மீறும் பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

வங்கிகளும் நேற்று வழமையை விட கூடுதல் நேரம் திறக்கப்பட்டிருந்ததோடு தபால் சேவைகளும் இன்று முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.

வழமை போன்று நேற்று பிரதான நகரங்களில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதும் ஏனைய நாட்களில் காணப்படும் வாகன நெரிசலோ சன நெரிசலோ இன்றி நகரங்களிலும் கிராமப் பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்பியிருந்ததாக அறிய வருகிறது. அத்தியாவசிய கடைகள் போன்றே ஏனைய கடைகளும் திறக்கப்பட்டிருந்ததோடு மக்கள்  பதற்றமோ அவசரமோ இன்றி தமது தேவைகளை நிறை வேற்றுவதை காணக்கூடியதாக இருந்ததாக அறிய வருகிறது.

இதே வேளை கூடுதலான கொவிட் 19 நோயாளர்கள் அடையாளங் காணப்பட்ட கொழும்பு,கம்பஹ,களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களில் தொடர்ந்தும் இயல்பு வாழ்க்கை தடைப்பட்டிருந்ததோடு அத்தியாவசிய சேவைகள் மாத்திரமே இடம்பெற்றதாக பாதுகாப்பு தரப்பு அறிவித்துள்ளது.

இந்த மாவட்டங்கள் தவிர்ந்தஏனைய மாவட்டங்களில் நேற்று காலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை ஊடரங்கு தளர்த்தப்பட்டிருந்ததோடு எதிர்வரும் 24 ஆம் திகதி வரை இதே போன்று தொடர்ச்சியாக ஊரடங்கு தளர்த்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. சனி, ஞாயிறு தினங்களில் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட இருக்கும் அதே வேளை 27 ஆம் திகதி முதல் முழுமையாக ஊரடங்கு தளர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் நாட்களில் முழுமையாக இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷம்ஸ் பாஹிம்

Tue, 04/21/2020 - 07:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை