கல்முனையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அமுல்படுத்த அவசர நடவடிக்கை

அரசாங்கத்தினால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை கல்முனை மாநகராட்சி ஆள்புல எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் கண்டிப்பாக அமுல்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அரிசித் தட்டுப்பாடு ஏற்படாதவாறு ஒழுங்கு விதிகளை அமுல்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களுக்கான நிர்ணய விலை தொடர்பாக கல்முனை மாநகர சபை மண்டபத்தில் இன்று (15) மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில், நுகர்வோர் அதிகார சபை உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற மீளாய்வுக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் கூடிய அவதானம் செலுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜீத் பெரேரா, மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர், கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், நுகர்வோர் அதிகார சபை உத்தியோகத்தர்களான ஏ.எச்.எச்.எம்.நபார், இசட்.எம்.சாஜித், கல்முனை வர்த்தகர் சங்கத் தலைவர் கே.எம்.எம்.சித்தீக், கல்முனை பொதுச் சந்தை வர்த்தகர் சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.கபீர் உட்பட வர்த்தகர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

அரிசி வகைகளுக்கான கட்டுப்பாட்டு விலைகளை அரசாங்கம் நிர்ணயம் செய்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஏப்ரல்-10ஆம் திகதி நுகர்வோர் அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் குறித்த நிர்ணய விலைகளில் கல்முனைப்பகுதி மக்களுக்கு அரிசியை பெற்றுக் கொடுப்பதற்கும் இதனால் செயற்கையாக அரிசித் தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுவதை தடுப்பதற்கும் நுகர்வோர் அதிகார சபையுடன் இணைந்து கல்முனை மாநகர சபை தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

தற்போது கையிருப்பிலுள்ள அரிசியை பதுக்கி வைக்காமல், அவற்றை விற்பனைக்கு விடுவதற்கும் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல் அனைத்தையும் பதப்படுத்தி, அரிசியாக்குவதற்கும் அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

இதற்காக அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் மற்றும் மொத்த அரிசி வியாபாரியாகளை இன்று மாலை கல்முனை மாநகர சபைக்கு அவசரமாக அழைத்து, அவர்களது கருத்துக்களையும் உள்வாங்கி, நுகர்வோர் அதிகார சபை உத்தியோகத்தர்கள் முன்னிலையில் அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் நடவடிக்கை எடுத்துள்ளார்.

(யூ.எம். இஸ்ஹாக் - நற்பிட்டிமுனை விசேட நிருபர்)

Wed, 04/15/2020 - 17:13


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை