ஊடகவியலாளர்கள், கலைஞர்களுக்கும் நிவாரணம் வழங்குவது குறித்து அரசு ஆராய்வு

தற்போது 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டு வரும் குடும்பங்களுக்கு மேலதிகமாக மேலும் 10 இலட்சம் குடும்பங்களுக்கு 5000 ரூபா வீதம் கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

அத்துடன் ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் நேற்று முன்தினம் அமைச்சரவையில் ஆராயப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அது தொடர்பான விடயங்களை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான பொருளாதார மேம்பாட்டு செயலணி மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

5,000 ரூபாய் கொடுப்பனவுகளை எதிர்வரும் தமிழ், சிங்கள புதுவருடத்திற்கு முன்பதாக வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,

நாட்டில் 54 இலட்சம் மக்களுக்கு இக்கால கட்டங்களில் அரசாங்கத்தினால் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகிறது.

இத் திட்டத்தின்கீழ் 18 இலட்சம் சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்கள், பட்டியலிடப்பட்டுள்ள மேலும் 06 லட்சம் குடும்பங்கள் ஆகியோருக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதற்கு மேலதிகமாக மூத்த பிரஜைகள் 06 லட்சம் பேர் வலது குறைந்தோர் 22 லட்சம் பேர், நீரிழிவு  நோயாளர் 40 லட்சம் பேர் என அந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மொத்தமாக 54 லட்சம் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த 54 லட்சம் குடும்பங்களுக்கு மேலதிகமாக சுயதொழில்கள் பாதிக்கப்பட்டு இன்னோரன்ன அசௌகரியங்களுக்கு உட்பட்டுள்ள மேலும் இலட்சக்கணக்கான குடும்பங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

நாட்டின் 14,000 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் அரச அதிகாரிகளின் பங்களிப்புடன் இந்த நாட்களில் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 10 இலட்சம் குடும்பங்களை உள்ளடக்கும் வகையிலான இந்த செயற்திட்டத்தில் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 5,000 ரூபாய் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றும் தெரிவித்தார். ெ

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 04/11/2020 - 08:25


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை