யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு தளர்த்தும் சாத்தியமில்லை

ஏனைய 4 மாவட்டங்களில் தளர்த்த அரசுக்கு சிபாரிசு

வடக்கில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்த முடியும் என சுகாதார சேவைகள் திணைக்களத்தின் வடமாகாண பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அரசாங்கத்துக்கு தாம் சிபாரிசு செய்யவுள்ளதாகவும், யாழ்.மாவட்டத்தில் சமுக மட்டத்திலான பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னரே ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது தொடர்பாக சிபாரிசு வழங்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் ஒன்பது மாகாணங்களினதும் சுகாதார சேவைகள் பணிப்பாளர்களை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடினார்.

இந் நிலையில் இக் கலந்துரையாடல் தொடர்பாக விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக மேலும் கூறுகையில்,

ஜனாதிபதியுடனான சந்திப்பில் சமூக மட்டத்தில் தொற்றுள்ளதா? என்பதை விரைவாக உறுதிப்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளது. இதற்காக VTA எனப்படும் பரிசோதனை கருவிகள் 400 வடமாகாணத்துக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

இதனூடாக வடமாகாணத்தில் 400 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ள முடியும். மேலும் ஊரடங்குச் சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தி பொருளாதார மேம்பாடு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக்கு எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக சிபாரிசு களை வழங்குமாறு மாகாண பணிப்பாளர்களிடம் ஜனாதிபதி கேட்டுள்ளார்.

இதற்கமைய வடமாகாணத்தில் யாழ்.மாவட்டம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களில் வெறும் 26 பேர் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டனர். வெளிநாடுகளில் இருந்து வந்த கண்காணிக்கப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கையும் மிக மிக குறைவு என்பதுடன் இந்த 4 மாவட்டங்களிலும் சமூக மட்டத்தில் நோயாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை.

எனவே குறித்த 4 மாவட்டங்களிலும் சமுக மட்டத்தில் கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு 2ம் கட்ட பரிசோதனையை அடுத்த சில நாட்களுக்குள் நடத்தவிருக்கின்றோம். இதில் தொற்றுள்ளவர்கள் அடையாளம் காணப்படாதவிடத்து அடுத்த வாரமே படிப்படியாக ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என்ற சிபார்சை உடனடியாக பொறுப்பு வாய்ந்த தரப்பினருடன் கலந்தாலோசித்து வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்.

யாழ்.மாவட்டத்தில் 17 நோயாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். சமூக மட்டத்தில் 320 பேர் கண்காணிக்கப்படுகின்றனர். வெளிநாடுகளிலிருந்து வந்த 1200 பேர் கண்காணிக்கப்படுகின்றனர். அந்தவகையில் யாழ்.மாவட்டத்தில் சமூக மட்டத்தில் காண்காணிக்கப்படும் 320 பேரில் 140 பேருக்கு இதுவரை பரிசோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றது.

இன்றும்(நேற்று) சண்டிலிப்பாய் பகுதியில் 16 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும். இந்த பரிசோதனைகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டு பூரணமாக சமூக மட்டத்தில் ஆபத்தில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னராக ஆளுநர், மாவட்ட செயலர் உள்ளிட்ட பொறுப்புவாய்ந்த தரப்புக்களுடன் கலந்துபேசி யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தலாமா? தளர்த்தக்கூடாதா? என்ற தீர்மானத்தை அடுத்துவரும் சில நாட்களில் எடுக்கவுள்ளோம் என்றார்.

பருத்தித்துறை விசேட, யாழ்.விசேட நிருபர்கள்

Fri, 04/17/2020 - 08:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை