பாதிக்கப்பட்ட தோட்டப்புற மக்களுக்கு இதுவரை நிவாரணம் சென்றடையவில்லை

மக்களின் வாக்குகளை பெற்ற மலையக அரசியல் தலைமைகள் தங்களது அரசியல் நாடகங்களை அரங்கேற்றுவதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது,

“கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் எம் மக்கள் வருமானத்தை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருகிறார்கள். மக்களுக்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரணங்கள் இதுவரையில் சரியான முறையில் சென்றடையாமல் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பலர் என்னை நாடி இருந்தார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கும் கிராம உத்தியோகத்தர்களுக்கும் இது தொடர்பான பல வாய் தர்க்கங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

தோட்டத் தொழிலாளிக்கு நிவாரணம் என்று எதுவுமே வழங்கப்படவில்லை. மாதா மாதம் சம்பளத்தில் அறவிடும் வகையிலேயே கடனாக பொருட்கள் வழங்கப்பட்டிருக்கிறது. கடனடிப்படையில் கூட சில தோட்ட நிர்வாகங்களினால் தொழிலாளிகளுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை.

அதோடு இந்த நிவாரணத்தொகை சில தோட்ட நிர்வாகங்களினால் இம்மாத சம்பளத்திலிருந்தே கழிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக எந்தவொரு அழுத்தமும் தொழிற்சங்கங்களால் தோட்டகம்பனிகளுக்கு வழங்கப்படவில்லை. இப்படியான இக்கட்டான சூழ்நிலையில் கூட மக்களுக்காக குரல்கொடுக்க முன்வராத தொழிற்சங்கங்கள் எதற்காக நடாத்தப்படுகின்றன? தொழிற்சங்க காரியாலயங்கள் எதற்கு? இம்மாத சந்தா அறவிடமாட்டோம் என்று கூறி அறவிட்ட சந்தா எதற்கு?

வெளிவேலைகள் செய்பவர்களுக்கும், 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் சமுர்தியின் மூலமும் அரசாங்கம் மூலமும் இரு கட்டங்களாக 5000 ரூபா வழங்கப்பட்டது. இது குறித்த கட்சியின் சார்பான முக்கியஸ்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டதே தவிர பாதிப்பிற்குள்ளாகியிருக்கும், வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் சரியான மக்களை சென்றடையவில்லை. பல இடங்களில் கட்சி சார்பானவர்களினால் பெயர்பட்டியல் பெறப்பட்டு அரசியல் தலையீடு இடம்பெற்றிருக்கிறது” என்றும் கூறியுள்ளார்.

Thu, 04/16/2020 - 14:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை