உத்தரவை மீறி ஊரடங்கில் பயணித்த கார் மீது சூடு

உத்தரவை மீறி ஊரடங்கில் பயணித்த கார் மீது சூடு-Curfew-Shooting at Car-3 Injured

காயமடைந்த மூவர் உள்ளிட்ட நால்வர் கைது

பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த காரின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 03 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (02) இரவு 10.20 மணியளவில் மொரட்டுவையிலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த குறித்த காரை நிறுத்துமாறு, எகொடஉயன பழைய வீதியில் உள்ள வீதித் தடையில் பணியிலிருந்த பொலிஸார் சமிக்ஞை வழங்கியுள்ளனர் ஆயினும் அதனை மீறி குறித்த கார் பயணித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மோதறை புதிய பாலத்திற்கு அருகில் மாவட்ட எல்லையில் அமைக்கப்பட்டுள்ள, வீதித் தடையிலுள்ள அதிகாரிகளுக்கு இது அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வீதித்தடையிலுள்ள பொலிஸாரின் உத்தரவையும் மீறி குறித்த கார் பயணித்த நிலையில் இதன்போது கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கார் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தியதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனையும் மீறி குறித்த கார் பயணித்துள்ளதோடு, புதிய பாலத்திற்கு அடுத்த பக்கமாக உள்ள பாணந்துறை தெற்கு, பொலிஸ் நிலைய வீதித் தடையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களும் இவ்வாகனத்தை நிறுத்துமாறு சமிக்ஞை செய்த போதிலும் இக்கார் நிறுத்தப்படாது சென்றுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டபோது, குறித்த கார் பாணந்துறை வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காரில் பயணித்த நால்வரில் மூவர் காயமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காரின் சாரதி உள்ளிட்ட காயமடைந்த 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எகொடஉயன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Fri, 04/03/2020 - 10:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை