பயங்கரவாதத்துக்கு எதிராக அமெ தொடர்ந்தும் செயற்படும்

அமெ. இராஜாங்கச் செயலாளர் மைக்கல் ஆர்.பொம்பேயோ

பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீது நீதியை கட்டவிழ்த்து விடுவதிலிருந்து அமெரிக்கா ஒருபோதும் ஓய்வெடுக்காதென அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக்கல் ஆர்.பொம்பேயோ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களது குடும்பத்துக்கும் காயமடைந்தவர்களுக்கும் அனுதாபங்களை  தெரிவிக்கும் விசேட அறிக்கையொன்றை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையிலேயே அவர் மேற்படி குறிப்பிட்டிருந்தார்.

மைக்கல் பொம்பேயோவின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது-.

ஒரு வருடத்துக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று காலை இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை நாம் நினைவுகூருகின்றோம். விடுமுறை தினமாகையால் ஒன்றாக நேரத்தை செலவிடுவதற்காக மக்கள் சென்றிருந்த தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்கு வைத்தே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

ஐ.எஸ்.ஐ.எஸ் இன் தூண்டுதலால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் உயிர்நீத்த 05 அமெரிக்கப் பிரஜைகள் உள்ளிட்ட 250 இற்கும் மேற்பட்ட மக்களை நாம் நினைவுகூருவதுடன் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த  அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இத்தாக்குதலில் சிக்கி உயிர் பிழைத்தவர்களுக்கு ஆதரவை நல்கும் அதேநேரம் அவர்கள் குணமடையவும் பிரார்த்திக்கின்றோம். தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்த இலங்கை அரசாங்கம் செயற்படுவது போன்றே இவ்வாறான   அட்டூழியங்களை இழைப்பவர்கள்     மீது நீதியை கட்டவிழ்த்து விடுவதிலிருந்து அமெரிக்கா ஓய்வெடுக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Thu, 04/23/2020 - 11:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை