சிங்கள மக்களின் மனங்களை வெல்லாவிட்டால் முஸ்லிம்கள் ஒதுக்கப்படுவதற்கான வாய்ப்பு

மாற்றத்திற்கான முன்னணியின் செயற்பாட்டாளர் சட்டத்தரணி ஹாதி இஸ்மாயில் 

சிங்கள, பௌத்த மக்களின் மனங்களை வெல்லாவிட்டால் முஸ்லிம்கள் மேலும் ஒதுக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் நிறைய காணப்படுகின்றன.

மனச்சாட்சியுள்ள சமூக ஆர்வலர்களும் அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளும் சிந்திக்க வேண்டிய தருணமிது. 2 ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டதும், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எமது முஸ்லிம் கட்சித் தலைவர்களின் கருத்து கணக்கிலெடுக்கப்படாததும் சமூகத்திற்கு  தொடரான பின்னடைவை தந்துள்ளது எனத் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார் மாற்றத்திற்கான முன்னணியின் செயற்பாட்டாளரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான மருதமுனை ஹாதி இஸ்மாயில்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது- ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் முஸ்லிம் சமூகத்தை ஏளனமான முறையில் விமர்சித்தவர்களும், ஒரே நாடு ஒரே தேசம் என வாய்வீச்சு வீசியவர்களும் அமைதியாகி விட்டார்கள்.இவை இவ்வாறிருக்க பெரும்பான்மை மக்களிடம் நல்ல பெயர் ஒன்றினை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக சில முஸ்லிம் தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் செய்திகள் எழுதுவதும்,  மாறாக கருத்துக்கள் வெளியிடாமல் மௌனமாக  இருப்பதும்,  அதே போன்று முகநூல் பாவனையாளர்களின் கிண்டல் செயற்பாடுகளும் மாற்று சமூகத்தினர் மத்தியில் முஸ்லிம் சமூகம் மீது இனவாத பார்வையை ஏற்படுத்தி உள்ளது.

அரசியலில் இனவாதம் என்பது இன்று நேற்று ஆரம்பித்த ஒன்றல்ல. பதியுதீன் மஹ்மூத் கல்வி அமைச்சராக இருந்த காலப்பகுதியில் அமைச்சரவையிலிருந்து அவரை அகற்ற வேண்டும் என ரணில் விக்கிரமசிங்கவும் அனுர பண்டாரநாயக்கவும் இனவாதக் கருத்தை விதைத்த போது சாதுரியமான முறையில் அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தடுத்து நிறுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எம்மவர்களில் சிலர் Covid19 தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் தனிமைப்படுத்தும் செயற்பாடுகளை உதாசீனம் செய்வதும்,  அமுல்படுத்தப்பட்டுவரும் ஊரடங்கு சட்டவிதிகளை மீறி செயற்படுவதும்,  நாட்டு சட்டங்களை மதிக்காமல் நடந்து கொள்வதும் எமது சமூகத்தின் மீதான பார்வையை வேறு திசைக்கு இட்டுச் சென்றுள்ளது. இவ்விடயங்கள் தொடர்பில் முஸ்லிம் கட்சித் தலைவர்கள் தமது ஆதரவாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் அம்மக்களை வாக்குகளுக்கு மாத்திரம் பயன்படுத்துவது ஒரு வாடிக்கையான விடயமாக இருப்பதுடன் இது சமூகத்திற்கு ஒருபேரிடியுமாகும்.

(மருதமுனை தினகரன் நிருபர்)

Thu, 04/09/2020 - 13:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை