கொரோனா நிலைமையை அவதானிக்க பாதுகாப்பு செயலர் வடக்கிற்கு விஜயம்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன வடக்கு மாகாணத்துக்கு நேற்று திடீர் விஜயம் மேற்கொண்டு இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

காலை விசேட உலங்குவானூர்தி மூலம் யாழ்ப்பாணம் பலாலி படைத் தலைமையகத்துக்கு சென்றிருந்தார்.

அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு தரப்பினர் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடலில் பங்குபெற்றியிருந்தார். இதன்போது இலங்கை விமானப் படையின் தளபதியும் பங்குபெற்றியிருந்தார். இக் கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகவியாலளர் சந்திப்பையும் மேற்கொண்டார்.

யாழ்ப்பாணத்தில் விஜயத்தை நிறைவு செய்த பாதுகாப்பு செயலாளர் மற்றும் விமானப் படை தளபதி பின்னர் உலங்குவானூர்தி மூலம் கிளிநொச்சிக்கு சென்றிருந்தனர். இரணைமடு நெலும் பியச மண்டபத்தில் இராணுவ அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் படையினருக்கு அவர்களது சேவைக்கு பாராட்டு தெரிவித்திருந்தார்.

இதன்போது கிளிநொச்சி மாவட்ட படைகளின் தளபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளாருக்கு கிளிநொச்சி டிப்போச் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவத்தின்  வெற்றி நினைவு தூபியின் மாதிரியை நினைவுப் பரிசாக வழங்கினார்.

அதனை தொடர்ந்து முல்லைத்தீவு கேப்பாப்புலவு  இராணுவ தலைமையகத்துக்கு சென்று பாதுகாப்பு படைத் தலைமை அலுவலக வளாகத்தில் முல்லைத்தீவு பாதுகாப்பு படை தளபதி டீப்த்தி ஜயதிலக்க  தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டார் .

தொடர்ந்து வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைகளின் தலைமையகத்திற்கு சென்றார்.

அங்கும் இராணுவ மற்றும் பொலிஸ் உயரதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் அதனை தொடர்ந்து வடக்கிற்கான விஜயத்தை நிறைவு செய்து கிழக்கு மாகாணம் சென்றார்.

இதேவேளை பாதுகாப்பு செயலாளரின் வருகை காரணமாக வடக்கில் பல்வேறு இடங்களிலும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(யாழ்ப்பாணம் குறூப், கிளிநொச்சி குறூப், பரந்தன் குறூப், முல்லைத்தீவு விசேட, வவுனியா விசேட, கனகராயன்குளம், குப்பிழான் நிருபர்கள்)

Sat, 04/18/2020 - 08:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை