எலிக் காய்ச்சலால் மரணித்த கடற்படை வீரரை தகனம் செய்ய பரிந்துரை

எலிக் காய்ச்சலால் மரணித்த கடற்படை வீரரை தகனம் செய்ய பரிந்துரை-Navy Personal Dead Dut to Rat Fever-Last Ritual According to COVID19

எலிக்காய்ச்சல் காரணமாக கொழும்பு கடற்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கடற்படை வீரர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எலிக் காய்ச்சல் காரணமாக திடீர் சுகவீனமுற்ற குறித்த இராணுவ உத்தியோகத்தர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் (25) உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு மரணமடைந்தவர், கடற்படைத் தலைமையகத்தில் பணிபுரிந்து வந்த  35 வயதான லெப்டினன்ட் கொமாண்டர் தொடம்வெல கெதர சுனில் பண்டார என, கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கலென்பிந்துனுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் கடந்த சனிக்கிழமை (18) இவ்வாறு சுகவீனமுற்ற நிலையில் கடற்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த உத்தியோகத்தர் சிகிச்சை பெற்று வந்த காலப்பகுதியில் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு எலி காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது.

இதேவேளை வெலிசறை கடற்படை முகாமில் கொவிட்-19 நோய் பரவியதையடுத்து, மேற்கொண்ட சோதனைகளில் இவருக்கு  கொரோனா வைரஸ் தோற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டு இருந்ததாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆயினும் எலிக்காய்ச்சல் உக்கிரமடைந்த நிலையில், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்றைய தினம் (25) உயிரிழந்துள்ளார்.

இவரது மரணம் கொரோனா வைரஸ் தொற்று நிலைமை காரணமாக ஏற்பட்டதல்ல என உறுதிப்படுத்தப்பட்டிருந்த போதிலும், வெலிசறை கடற்படை முகாமில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலை காணப்படுவதன் காரணமாக, இவரது இறுதிக் கிரியைகள், கொரோனாவினால் மரணித்த ஒருவரது இறுதிக்கிரியைகளை மேற்கொள்ளும் விதிமுறைகளின் கீழ், மேற்கொள்ளப்பட வேண்டும் என ராகமை சட்ட வைத்தியரினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அவரது இறுதிக்கிரியைகள் கடற்படையின் மரியாதையுடன் உரிய விதிமுறைகளை பின்பற்றி இடம்பெறவுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
 

Sun, 04/26/2020 - 15:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை