கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை ஜனாதிபதி கூட்ட வேண்டும்

தமிழ் தேசிய கட்சி தலைவர் சிறிகாந்தா

நாட்டில் தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி கலைக்கப்பட்ட பரராளுமன்றத்தை மீண்டும் செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான என்.சிறிகாந்தா தெரிவித்தார்.

மேலும் தேர்தல் நடைபெற்றால் அதனால் பாரதூரமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உருவாகலாம் எனவும் குறிப்பிட்டார்.

தமிழ் தேசிய கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் கூறுகையில்,

பொதுத் தேர்தல் நடக்கின்ற சூழ்நிலையில் தான் தேர்தல் கணிக்கப்பட்ட திகதியில் இருந்து 3 மாதங்களிற்குள் புதிய பாராளுமன்றம் கூட வேண்டும்.

கலைக்கப்பட்ட பாராளுமன்றம் மீண்டும் செயலூக்கம் செய்யப்பட்டு ஜனாதிபதியினால் மீண்டும் கூட்டப்பட்டு அது செயற்படுமாக இருந்தால் பொதுத் தேர்தலை நடத்தி புதிய பாராளுமன்றத்தைக் கூட்டும் கட்டாயம் அரசியல் சாசனத்தின் கீழான கடமைப்பாடு பொறுப்பற்று போய்விடுகின்றது என்பதனையும் சுட்டிக்காட்டுகின்றோம்.

அரசியல் சாசனத்தில் வழி இருக்கின்றது. இந்தப் பாராளுமன்றம் கடந்த மாதம் 2 ஆம் திகதி கலைக்கப்படாவிடின் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை செயற்பட்டிருக்கலாம்.

ஆகவே இன்றைய சூழ்நிலையில் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டி சாத்தியமான காலத்திற்கு அந்த நிலமையை ஏற்படுத்த முடியும்.

தேவைப்படின் செப்டெம்பர் 2ஆம் திகதி வரை பாராளுமன்றத்தை மீள இயக்கலாம்.

தற்போதுள்ள அவசரகால நிலமை சீராக்கப்பட்டு பாராளுமன்றம் செயலிழக்குமாயின் அதன்பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை புதிய பாராளுமன்றம் கூட்டப்படுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்க முடியாது.

இன்று தேவைப்படுகின்ற கால அவகாசத்தை முழு நாடும் ஏற்றுக்கொள்ள முடியும்.

நாட்டுக்கு முன்னால் உள்ள சவாலை ஒட்டு மொத்தமாக முற்றுமுழுதாக அகற்றிய பின்னர் பொதுத் தேர்தல் பற்றி ஆராய வேண்டும் என்றார்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

Mon, 04/20/2020 - 09:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை