அமெரிக்காவில் கொரோனா கோரத் தாண்டவம்

மொத்த உயிரிழப்பு 52,500க்கும் அதிகம்

சீனாவில் உருவெடுத்த  கொரோனா வைரஸ்  தற்போது அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அங்கு வைரஸ் தாக்குதலுக்கு நேற்றுமுன்தினம் ஒரே நாளில் ஆயிரத்து 951 பேர் பலியாகியுள்ளனர் அமெரிக்காவில் நேற்று வரை 52,500 இற்கு மேற்பட்டோர் கொரோனாவுக்குப் பலியாகி விட்டனர். எல்லாமாக 9,25,500 இற்கு மேற்பட்டோர் நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. நேற்றுமுன்தினம் ஒரே நாளில் புதிதாக 38 ஆயிரத்து 764 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் நேற்றுமுன்தினம் வரை ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 432 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளனர்.

உலகளவில் அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளதால் அந்நாடு நிலைமையைக் கையாளுவதில் பெரும் திண்டாட்ட நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. அச்சுறுத்தல் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அமெரிக்கா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இதுஒருபுறமிருக்க அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த வியாழனன்று வோஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் “ஒரே நிமிடத்தில் கிருமி நாசினி கொரோனா வைரஸை வெளியேற்றுகிறது. எனவே கிருமிநாசினியை ஊசி வழியாக உடலில் செலுத்தும் முறை குறித்து ஆராயப்பட வேண்டும்” என யோசனை கூறினார்.

இது பெருத்த சர்ச்சையை அங்கு ஏற்படுத்தியது. இது தொடர்பாக பிரபல கிருமி நாசினிகளான டெட்டோல், லைசோல் ஆகியவற்றை தயாரிக்கின்ற ரெக்கிட் பென்கிசர் நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

“எந்தவொரு சூழ்நிலையிலும், எங்கள் கிருமி நாசினிகளை மனித உடலுக்குள் ஊசி வழியாகவோ பிற விதங்களிலோ செலுத்தக் கூடாது. இதில் தெளிவாக இருக்க வேண்டும். எங்களது எல்லா தயாரிப்புகளையும் போல கிருமிநாசினிகளையும், சுகாதார தயாரிப்புகளையும் அவற்றை என்ன நோக்கத்திற்காக, எப்படி பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் வழிகாட்டி இருக்கிறோமோ, அப்படி மட்டுமே பயன்படுத்த வேண்டும்” என்று அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.இதேசமயம் அமெரிக்காவில் தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்து வருவது உலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உலகில் நேற்று வரையான 24 மணி நேரத்தில் 1,03,878 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Sun, 04/26/2020 - 06:56


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை