தேர்தலா? மக்களா? தீர்மானிக்க வேண்டிய தருணமே இது

தேர்தலா? மக்களா? முக்கியம் என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டிய தருணமே இது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது,

தற்போதைய சூழ்நிலையில் பாராளுமன்றம் கூட்டப்படுவதே சிறந்த தீர்மானமாகும். நாட்டில் கொரோனா தாக்கம் உச்ச நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. நாளுக்கு நாள் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளது.

கல்வி, பொருளாதாரம், சுற்றுலாத்துத்துறை என அனைத்திலும் நாம் பாதிப்படைந்துள்ளோம். கொரோனா என்ற கொடிய நோய் நீங்க வேண்டுமென்பதே அனைத்து மக்களின் வேண்டுகோளாக ஒருபுறம் இருக்கின்றது. மறுபுறம் தேர்தல் தொடர்பான அறிக்கைகளும் அவ்வப்போது வெளியிடப்பட்டுக்கொண்டிருகின்றன.

பொதுத்தேர்தல் ஜுன் 20 இல் நடாத்தப்படும் என வர்த்தமானி வெளியிடப்பட்டாலும் தேர்தலை பிற்போடப்படுவதற்கான சாத்தியக்கூறுகளே அதிகரித்துள்ளன. ஆனால் பொதுத்தேர்தலை இலக்கு வைத்தே நிவாரணங்கள் மலையகத்தில் முன்னெடுக்கப்படுவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

எனவே, இந்நேரத்தில் தேர்தல் முக்கியமா? அல்லது மக்கள் முக்கியமா? என்பதை தீர்மானிக்க வேண்டும் என்றார்.

(பூண்டுலோயா நிருபர்)

Tue, 04/28/2020 - 14:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை