அக்கரைப்பற்றில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசம் விடுவிப்பு

அக்கரைப்பற்றில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசம் விடுவிப்பு-Akkaraipattu Isolated Area Released

320 குடும்பங்களை சேர்ந்த 900 பேர்

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று-19 ஆம் பிரிவில் கடந்த 08 ஆம் திகதி கொரோன தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்து முடக்கப்பட்டிருந்த அக்கரைப்பற்று-19 ஆம் பிரிவு 21 நாட்களின் பின் நேற்று (29) காலை விடுவிக்கப்பட்டது.

விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய சுகாதார பரிசோதகர்கள் கிருமி தொற்று விசிறும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்பிரதேசத்தில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த 320 குடும்பங்களை சேர்ந்த 900 பேர் நேற்று தங்களது வழமையான நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

அக்கரைப்பற்று-19 ஆம் பிரிவில் கடந்த 08ஆம் திகதி கொரோனா தொற்றிய ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து அவரது மனைவியும் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டு இருவரும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

குறித்த தொற்றுக்குள்ளான நபர்கள் வசித்து வந்த பிரதேசத்தின் சுமார் 500  மீற்றர் சுற்றுவட்டாரம் சுமார் மூன்று வாரங்கள் முடக்கப்பட்டிருந்தது.  இப்பிரதேசத்தில் வசித்து வந்த சுமார் 320 குடும்பங்களைச் சேர்ந்த 900 பேர் வெளிச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அத்தோடு குறித்த பிரதேசத்திற்கு வெளிப் பிரதேசத்திலிருந்து வருகை தரும் எவரும் இப்பிரதேசத்தினுள் அனுமதிக்கப்படவுமில்லை.

இப்பிரதேசத்தின் சில வீதிகள் பாதுகாப்புத் தரப்பினரால் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்ததோடு,  இராணுவத்தினர் பொலிஸார் போன்றோரின் விஷேட ரோந்து நடவடிக்கைகளும் இடம்பெற்று வந்தன.

இப்பிரதேசத்தில் வசித்து வந்த கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்ட இருவர் வெலிக்கந்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவ்விருவரும் சுகம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

அக்கரைப்பற்றில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசம் விடுவிப்பு-Akkaraipattu Isolated Area Released

அத்தோடு, இவர்களுடன் நேரடி மற்றும் இரண்டாம் நிலை தொடர்புகளைப் பேணியவர்கள் என இனங்காணப்பட்ட சுமார் 75 பேர் பொலன்னறுவை தம்மின்ன தனிமைப்படுத்தல் நிலையத்தில் தமது தனிமைப்படுத்தல் காலத்தினை பூர்த்தி செய்து மருத்து பரிசோதனையின் பின்னர் நோய்த் தொற்றற்றவர்கள் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் (28) இவர்கள் தத்தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

(அக்கரைப்பற்று மேற்கு தினகரன் நிருபர் - எஸ்.ரி. ஜமால்தீன், அட்டாளைச்சேனை தினகரன் நிருபர் - எம்.ஏ. றமீஸ்)

Thu, 04/30/2020 - 12:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை