மன்னாரில் அரிசி, அத்தியாவசியப் பொருட்களுக்கு விலை நிர்ணயம்

அரச அதிபர் மோகன்றாஸ் அறிவிப்பு

நிறுவனங்களால் மக்களுக்கு வழங்கப்படுகின்ற உணவுப் பொருட்கள் பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்குபவர்களுக்கே நிவாரணம் வழங்குவதுக்கான அனுமதி தரப்படும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள தலம்பல் நிலை தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலை தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

வெவ்வேறு விலைகளில் பொருட்கள் விற்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளன. எனவே அத்தியாவசியப் பொருட்களின் விலைகளுக்கு நிர்ணய விலை தீர்மானிக்கப்பட்டுள்ளன. வெள்ளைச் சம்பா, வெள்ளை நாடு என்பன மொத்த விலைக்கு தலா 95 ரூபாவுக்கும், சில்லறை விலைக்கு தலா 100 ரூபாவுக்கும் விற்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு கீரிச் சம்பா 110 ரூபாவுக்கும் வெள்ளை கீரிச் சம்பா 115 ரூபாவுக்கும் மொத்த விலைகளுக்கு விற்கப்படும். சில்லறை விலைக்கு சிவப்பு கீரிச் சம்பா 115 ரூபாவுக்கும், வெள்ளை கீரிச் சம்பா 120 ரூபாவுக்கும்   விற்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தீர்மானிக்கப்பட்ட விலைகளுக்கு அதிகமாக விற்கப்படக்கூடாது.

அத்துடன் நிவாரணமாக முக்கிய பொருட்களையே வழங்க வேண்டும். அதாவது உருளைக் கிழங்கு, வெங்காயம் மக்கள் விரும்பினால் மட்டும் வழங்கலாம். அரிசி, மா, சீனி, சோயா,  சோப் மற்றும் தேயிலை இவை பொருட்களில் குறிக்கப்பட்டுள்ள விலைகளிலேயே வழங்கப்பட வேண்டும்.

மா 81.40 சதத்துக்கு மொத்த விலையாகவும் சில்லறை விலைக்கு 86 ரூபாவுக்கு விற்கப்பட வேண்டும். சீனியின் சில்லறை உச்சப்பச்ச விலை 125 ரூபாவாகவே இருக்க வேண்டும். சோயா ஒரு கிலோ 90 ரூபாவாகவே இருக்க வேண்டும். நிவாரணப் பொருட்களை பெருமபாலும் சதொசா மற்றும் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் மூலமாகவே வழங்குவதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது எடுக்கப்பட்டுள்ளது.

சதொச விற்பனை நிலையங்களின் சேவைகள் திருப்தியாக காணப்படுகின்ற போதும் இங்கு பொருட்களை கொண்டு வருகின்ற வேகம் குறைவாக காணப்படுகின்றமையால் தனியாரை விடுத்து பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களை தீவிரமாக செயல்பட பணித்துள்ளோம். கடந்த காலங்களில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் சரியான முறையில் இயங்காமையால் தற்பொழுது திருப்தியான முறையில் இயங்குவதற்கு மாந்தை மேற்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்கு .75 மில்லியன் ரூபாவும் ஏனைய சங்கங்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாவும் முற்பணமாக கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

தலைமன்னார் நிருபர்

Thu, 04/16/2020 - 13:47


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை