நுவரெலியாவில் இரசாயன உரம் அதிக விலைக்கு விற்பனை

விவசாயிகள் குற்றச்சாட்டு

நுவரெலியா, கந்தப்பளை, இராகலை, ஹட்டன் உட்பட நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களிலும் விவசாயத்திற்காக பாவிக்கப்படும் இரசாயன உர வகைகளை அதிக விலைக்கு வியாரபாரிகள் விற்பனை செய்வதாக விவசாயிகள் முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கடந்த காலங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலேயே விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு வழமையாக கடனுக்கு மருந்து பொருட்களையும் இரசாயன உரங்களையும் வழங்கி வந்தனர்.

ஏற்பட்ட அசாராதாரண நிலைமை காரணமாக கடன் வழங்குவதை வியாபாரிகள் நிறுத்திவிட்டதுடன் பணம் கொடுத்தால் மாத்திரமே பொருட்களை வழங்க முடியும் என்ற நிலைக்கு வந்தனர். இதன் காரணமாக விவசாயிகளிடம் கையில் பணமும் இல்லை. வங்கிகளில் பண பரிமாற்றம் செய்ய முடியாத நிலையில் இருந்தமையால் தங்க நகைகளை அடகு வைத்து பணத்தை பெற்றுக்கொண்டே விவசாய பொருட்களை பெற்றுக்கொண்டனர். எனவே இவ்வாறான ஒரு நிலையில் வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பனை செய்வது மனிதாபிமானமற்ற செயலாகும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக திடீரென ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதுடன் போக்குவரத்திற்கும் பல சிக்கல்கள் ஏற்பட்டது. இதன் காரணமாக சிறு மரக்கறி வியாபாரிகள் தங்களுடைய வியாபாரத்தை முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. இதன் காரணமாக மரக்கறி வகைகளின் விலைகளும் வெகுவாக குறைவடைந்த நிலையிலேயே விவசாயிகள் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தனர்.

இவ்வாறான ஒரு இக்கட்டான நிலையில் விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்கின்ற  வியாபாரிகளை அடையாளங்கண்டு கடுமையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

(நுவரெலியா நிருபர்)

Wed, 04/22/2020 - 09:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை