கொரொனா வைரஸ் ஒழிப்பு செயலணி மீளாய்வுக் குழுவின் முக்கிய செயற்பாடுகள் ஆராய்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாடு தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய விஷேட செயற்பாடுகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளும் வகையில் கொரோனா ஒழிப்பு செயலணி மீளாய்வுக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் தலைமையில் மேற்படி குழு நேற்றைய தினம் அமைச்சின் கேட்போர் கூடத்தில் கூடி முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது.

மேற்படி விஷேட செயலணியின் மீளாய்வு குழுவில் மருத்துவ கட்டுப்பாட்டாளர்கள், நிருவாக சேவை அதிகாரிகள் மற்றும் விசேட மருத்துவர்கள் 35 பேர் உள்ளடங்குகின்றனர்.

இந்தக் குழு இரண்டு தினங்களுக்கு ஒரு முறை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் கூடவுள்ளது.

இதன்போது புதிய நோயாளர்கள் இனம் காண்பதற்காக மேற்கொள்ளப்படும் பரிசோதனை முறைமைகள், சிகிச்சைகளைப் பலப்படுத்தல், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற சந்தர்ப்பத்தில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தல்,மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகித்தல், பயணிகள் போக்குவரத்து நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்தல், ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட விடயங்கள் இக்குழுவில் ஆராயப்பட்டுள்ளன.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் நிலையில் சமூக செயற்பாடுகள், பிரதேச மற்றும் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள், சுகாதார சேவை அதிகாரிகள் ஊடாக உரிய சுகாதார முறைகளை மக்களுக்கு தெளிவூட்டுதல், ஆஸ்பத்திரி சிகிச்சை நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லுதல்,சுகாதார சேவை அதிகாரிகள் வழங்கும் ஆலோசனைக்கு இணங்க போக்குவரத்து சேவைகளை செயல்படுத்துதல், புதிய வைரஸ் தொற்று நோயாளிகளை இனங்காணல் தொடர்பிலான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தேவையான உபகரணங்களை தட்டுப்பாடின்றி வழங்குதல் தொடர்பில் இதன்போது அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அதிகாரிகளுக்கு வழிகாட்டல்களை வழங்கினார்.

நேற்றைய இந்த நிகழ்வில் மேற்படி குழுவை பிரதிநிதித்துவப்படுத்தி சுகாதார அமைச்சின் செயலாளர் சந்திராணி ஜயவர்தன, மேலதிக செயலாளர்களான  சுனில்  டி அல்விஸ், லக்ஸ்மி சோமதுங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அணில் ஜாசிங்க, பிரதி பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 04/23/2020 - 08:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை