மாணவர்களுக்கு விசேட கல்வித் தொலைக்காட்சி சேவை இன்று முதல் ஆரம்பம்

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களினதும் கல்வி நடவடிக்கைகளை பலப்படுத்தும் வகையில் ‘குருகெதர’ தொலைக்காட்சி கல்விச்சேவை இன்று (20) முதல் ஒளிபரப்புச் செய்ய கல்விஅமைச்சு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் வழிகாட்டலில் உயர்கல்வி  அமைச்சர் பந்துல குணவர்தன, கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும ஆகியோரின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்த விஷேட தொலைக்காட்சி கல்விச் சேவை, ‘குருகெதர’ கல்வி தொலைக்காட்சி சேவையாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கிணங்க எதிர்வரும் திங்கட்கிழமை இருபதாம் திகதி காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மற்றும் இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இந்த ஒளிபரப்பு நடைபெறவுள்ளது. அதனையடுத்து மேற்படி கல்வி தொலைக் காட்சி சேவை 21ஆம் திகதியிலிருந்து தினமும் காலை 4 மணி முதல் ஒளிபரப்பப்படவுள்ளது.

உயர்கல்வி கலைத்துறை மாணவர்களுக்காக சிங்களம், தமிழ், பூகோள விஞ்ஞானம், அரசியல் விஞ்ஞானம், பௌத்த கலாசாரம் ஆகிய பாடங்களும் வணிக மாணவர்களுக்காக கணக்கியல், வர்த்தக விஞ்ஞானம், பொருளாதார விஞ்ஞானம் ஆகிய படங்களும் விஞ்ஞான மற்றும் கணித விடய மாணவர்களுக்காக இரசாயனம் விஞ்ஞானம், பௌதீக விஞ்ஞானம்,உயிரியல் விஞ்ஞானம் ஆகிய விடயங்களும் தொழில்நுட்ப மாணவர்களுக் காக தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞானம், பொறியியல் தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் தகவல் தொடர்பாடல் ஆகிய பாடங்களும் ஒளிபரப்பப்பட உள்ளது.

அதேவேளை கல்விப் பொது தராதர சாதாரண தர மாணவர்களுக்காக சிங்களம், தமிழ், ஆங்கிலம்,கணிதம், விஞ்ஞானம் மற்றும் வரலாறு ஆகிய படங்களை உள்ளடக்கியதாக கல்வி  நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும்.

இதற்கிணங்க அனைத்து பாடங்கள் சம்பந்தமாகவும் சிங்கள மற்றும் தமிழ் மொழியில் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் மற்றும் பாடங்களுடன் தொடர்புபட்ட விரிவுரையாளர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல்களும் இடம்பெறவுள்ளன.

மேற்படி கல்வி தொலைக்காட்சி சேவை செயற்திட்டம் தொடர்பான தொழில்நுட்பம் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பினை வழங்குவதற்கு தேசிய கல்வி நிறுவகம்,பரீட்சைகள் திணைக்களம், தகவல் தொழில்நுட்ப நிறுவனம், தர்ம வாகினி நிறுவனம், கல்வி அமைச்சு; ஆகியன இணைந்து செயற்பட உள்ளன.

அதேவேளை கல்வி அமைச்சுக்கு மேலதிகமாக உயர் கல்வி அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, திறன் அபிவிருத்தி அமைச்சு, தொழிற்கல்வி ஆணைக்குழு ஆகியன இணைந்து தினமும் இரவு 10 மணி முதல் கல்வி நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 04/20/2020 - 10:31


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை