பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் சங்கிலி தொடராக தொற்று பரவியது

ஆராய விசேட கூட்டம்

யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்களுக்கு சங்கிலித் தொடராக தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இது தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஏற்படுத்தப்பட்டுள்ளது என யாழ்.போதனா வைத்தியாசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ்.போதனா வைத்தியாசாலையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

யாழ்ப்பாணத்தில் கொரோனோ தொற்று நோயாளி அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் மற்றும் அரியாலையில் ஆராதனை நடத்த வந்திருந்த மத போதகருடன் நெருங்கிப் பழகியவர்கள் என 20 பேர் பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களிற்கு கடந்த முதலாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 6 பேருக்கு தொற்று அடையாளம் காணப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட அடுத்தகட்டப் பரிசோதனையில் எட்டுப் பேருக்கு அடையாளம் காணப்பட்டது. இதன் பின்னர் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இரண்டு பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவ்வாறு அங்கிருந்த 20 பேரில் தற்போது 16 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையினால் இவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பதை தெளிவாக என்னால் கூற முடியாதிருக்கிறது.  தனிமைப்படுத்தலில் ஒன்றாக இருந்ததால் தான் ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று மக்கள் அச்சம் கொள்கின்றனர். ஆனால் தனிமைப்படுத்தலில் இருந்து தான் ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு தொற்று ஏற்பட்டதாக கூறிவிட முடியாது. ஏனெனில் தொற்றுச் சந்தேகத்திலேயே அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்படுகின்றனர்.  ஆகவே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டே இருந்திருக்க வேண்டும். ஆகையினால் தனிமைப்படுத்தல் நிலையங்களிலேயே அவர்கள் தனிமைப்படுத்தல் நடைமுறைகளைப் பேணியிருக்க வேண்டும். அவ்வாறு அந்த நடைமுறைகளைப் பேண வேண்டியது அனைவரதும் கூட்டுப் பொறுப்பு ஆகும். அவர்கள் சுகாதாரப் பிரிவினர் ஊடாக இராணுவத்தின் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஆகவே இந்தக் கூட்டுப் பொறுப்பில் எந்தெந்த இடங்களில் தவறு நடந்து என்று என்னால் கூற முடியாதுள்ளது. இது ஒரு சங்கிலித் தொடர்பைக் கொண்டது.

ஆகையினால் அந்தச் சங்கிலித் தொடர்பாக கூட இந்த தொற்று ஏற்பட்டிருக்கலாம். இந்த விடயங்கள் சம்பந்தமாக சுகாதார அமைச்சு மற்றும் சுகாதாரப் பணிமனைக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்கின்றது. மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்காக சில தினங்களில் விசேட கூட்டமொன்றையும் கூட இருக்கின்றோம் என்றார்.

யாழ்.விசேட, பருத்தித்துறை விசேட நிருபர்கள்

Fri, 04/17/2020 - 08:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை