விவசாயிகளிடமிருந்து 9 இலட்சம் கி.கி. மரக்கறிகள் கொள்வனவு

விவசாயிகளிடமிருந்து 9 இலட்சம் கி.கி. மரக்கறிகள் கொள்வனவு-Government Purchased More than 9 Lakhs kg Vegetable From Farmer-Presidential Task Force

- அரசாங்கம் சுமார் 3 கோடி செலவு
- உள்ளூராட்சி சபைகள் ஊடாக விநியோகம்


ஜனாதிபதி செயலணியின் தலையீட்டின் மூலம் அரசாங்கத்தின் மரக்கறிகளை கொள்வனவு செய்யும் திட்டத்தின் மூலம் ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் 9 இலட்சம் கிலோகிராம் மரக்கறிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பில் அரசாங்கத்தினால் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய திட்டங்களுக்கு அமைவாக நாட்டின் அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் பொருட்டு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

அதற்கமைய  மரக்கறி மற்றும் பழங்களை கொள்வனவு செய்வது தொடர்பான விசேட வேலைத்திட்டமொன்றை அத்தியாவசிய சேவைகளுக்கான விசேட ஜனாதிபதி செயலணி தலையீட்டின் கீழ் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்ட நிலைமையில், தங்களது உற்பத்திகளை விற்பனை செய்வதில் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டும், தமிழ் சிங்கள புத்தாண்டு மற்றும் உயிர்த்த ஞாயிறு காலப்பகுதியில் நுகர்வோருக்கு மரக்கறி மற்றும் பழங்களை  வழங்குவது இதன் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் நேற்று முன்தினம் (11) மற்றும் நேற்றைய தினம் (12) ஆகிய இரு நாட்களில் ஒன்பது இலட்சம் கிலோகிராம் இற்கும் அதிகமான (904,010 கி.கி.) மரக்கறி மற்றும் பழங்கள் அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அவசியமான நிதி உதவியை, நுவரெலியா மற்றும் மாத்தறை   மாவட்டங்களின், மாவட்ட செயலாளரிடம் தற்போது கையளிக்கப்பட்டுள்ளதோடு, பொருளாதார மத்தியநிலையங்கள் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகங்கள் மட்டத்தில், நேற்று முன்தினம் (11) மரக்கறிகள் கொள்வனவு ஆரம்பிக்கப்பட்டதுடன், இம்மரக்கறிகளை போக்குவரத்து செய்வதற்கான பணிகள் நேற்று (12) நள்ளிரவு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

மரக்கறிகளை கொள்வனவு செய்வது தொடர்பில் பொருளாதார மத்திய நிலையங்கள் மட்டத்தில் பெறப்பட்ட மரக்கறிகள் ஏப்ரல் 11ம் திகதி கொள்வனவு செய்யப்பட்டு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. அத்துடன் அன்றைய தினமே நாடுமுழுவதும் அனுப்பி வைக்கப்பட்டன. நுவரெலியாவில் கொள்வனவு செய்யப்பட்ட மரக்கறிகளின் அளவு 3 இலட்சத்து 17 ஆயிரத்து 396 கிலோகிராம் (317,396kg) என்பதோடு, இதன் பெறுமதி, ரூபா 2 கோடி 86 இலட்சத்து 34 ஆயிரத்து 975 (ரூ. 28,634,975)  ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் எடுத்துக் கொண்டால், சுகாதார பாதுகாப்பின் அடிப்படைகள் லொறிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடுவதை தடுப்பதற்கான அவசியம் ஏற்பட்டிருந்தது. அதற்கமைய பிரதேச மத்திய நிலையங்கள் ஒரு சிலவற்றிலிருந்து ஏப்ரல் 11ஆம் திகதி மரக்கறிகள் கொள்வனவு  ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது அரசாங்கத்தினால் மக்களுக்காக  செலுத்தப்படும் அதிக விலை காரணமாக, எதிர்வரும் நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய அறுவடைகளையும் விற்பனை செய்வதற்கு விவசாயிகள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய தம்புள்ளை பிரதேசத்தில், அதிகளவிலான மரக்கறிகள் சந்தைக்காக முன்வைக்கப்பட்டதன் அடிப்படையில், மரக்கறிகளின் அளவை, நிறுவைகள், பற்றுச்சீட்டு வழங்குதல், ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம், பொருளாதார மத்திய நிலையத்தின் தொடர்பாடல் போன்ற விடயங்களை மேற்கொள்ள வேண்டியிருந்ததால் இதற்காக அதிகளவான நேரம் எடுத்திருந்தது. ஆயினும் கடைசி கிலோகிராம் வரை அரசாங்கம் மரக்கறிகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்திருந்தது.

அநுராதபுர மாவட்டத்தில் மரக்கறிகள் கொள்வனவு, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டது. இக்கொள்வனவுக்கான நிதி, மாவட்ட செயலாளரிடம் வழங்கி வைக்கப்பட்டது.

தம்புள்ளை மற்றும் தமுத்தேகம ஆகிய இடங்களில்  நேற்றைய தினம் (12)  5 இலட்சத்து 86 ஆயிரத்து 614 கிலோ கிராம் (586,614கி.கி.) மரக்கறிகள் கொள்வனவு செய்யப்பட்டது. அதன்படி நுவரெலியா, மாத்தளை, ஆகிய மாவட்ட செயலாளர்கள் மூலம் 9 இலட்சத்திற்கும் அதிகமான (904,010 கி.கி.) மரக்கறிகள் கொள்வனவு செய்யப்பட்டு போக்குவரத்து செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட அனைத்து மரக்கறிகளும் தற்போது நாடு முழுவதும் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கு விநியோகிக்கப்பட்டு, அவற்றின் ஊடாக நியாயமான விலையில் அந்தந்த பிரதேசங்களில் விற்பனை செய்யப்படும். அதற்கமைய பாவனையாளர்களுக்கு தட்டுப்பாடின்றி மரக்கறி மற்றும் பழங்களை சலுகை விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என்பதோடு, ஒரு சில இடங்களில் கொடையாளர்கள் முன்வந்து அரசாங்கத்தின் செலவை ஏற்றுக் கொள்வதன் மூலம் மக்களுக்கு இலவசமாக மரக்கறிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரியவருகின்றது.

இதற்கமைய, மாவட்ட ரீதியில் மரக்கறிகளின் கொள்வனவுக்கான கோரிக்கைகள் கிடைத்துள்ளன. உதாரணமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் மாத்திரம் நுவரெலியா மரக்கறிகள் 161,881 கிலோகிராம் முற்பதிவும், தம்புள்ளை மரக்கறி கொள்வனவுக்காக 168,000 கிலோகிராம் முற்பதிவும் கிடைத்துள்ளன. இம்மாவட்டங்களுக்கு 161,881 கிலோ கிராம் நுவரெலியா  மரக்கறிகளும், 158,508 கிலோ கிராம் தம்புள்ளை மரக்கறிகளும் அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறு பெரும்பாலான மாவட்டங்களில் மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கான முற்பதிவுகள் கிடைத்துள்ளதோடு, நுவரேலியா மரக்கறி களுக்கான மொத்த கேள்வி 303,000 கிலோகிராம் என்பதோடு, தம்புள்ளை மரக்கறிகளுக்கான மொத்த கேள்வி 994,000  கிலோகிராம் ஆகும்.

எவ்வாறாயினும் இவ்வேளையில் தங்களது விளைச்சல்களை இதுவரை விற்க முடியாத விவசாயிகள் காணப்படுவார்களாயின், அது தொடர்பில் எவ்வித பயமும் கொள்ளத் தேவையில்லை எனவும், இவ்வாறான சந்தர்ப்பத்தில் பொதுமக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் உயர்ந்த அளவில் ஈடுபட்டு வருவதோடு, தொடர்ந்தும் இவ்வாறு அரசாங்கம் விவசாயிகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய விவசாயிகளின் விளைச்சலை விற்பனை செய்ய முடியாமல் அல்லது வீணாவதற்கு இடமளிக்க வேண்டாம் என அரசாங்கம், அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த மரக்கறி கொள்வனவுத் திட்டமானது, தமது விளைச்சல்களை அரசாங்கம் கொள்வனவு செய்யுமா என சந்தேகத்தில் இருந்த விவசாயிகளுக்கு, அரசாங்கம் வழங்கிய பலன் இது என்பதோடு நாட்டின் உணவு பாதுகாப்பு தொடர்பான உறுதிப்பாட்டையும் இது வெளிக்காட்டுகின்றது என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Mon, 04/13/2020 - 19:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை