வவுனியா மினி சூறாவளி; 58 குடும்பங்களுக்கு இழப்பீடு

வவுனியாவில் மினி சூறாவளியால் பாதிப்படைந்த 58 குடும்பங்களுக்கு மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் ஊடாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் கடந்த 08ஆம் திகதி மாலை திடீரென மினி சூறாவளி ஏற்பட்டது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வீடுகளின் கூரைகள் சேதமடைந்ததுடன், வவுனியா கந்தபுரம் கிராம அலுவலர் பிரிவில் இடி மின்னல் தாக்கத்தினால் இளம் குடும்பஸ்தர் ஒருவரும் மரணமடைந்திருந்தார்.

வவுனியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சிவபுரம் கிராம அலுவலர் பிரிவில் 10 வீடுகளும், மரக்காரம்பளை கிராம அலுவலர் பிரிவில் 30 வீடுகளும், பம்பைமடு கிராம அலுவலர் பிரிவில் 05 வீடுகளும், செக்கட்டிப்புலவு கிராம அலுவலர் பிரிவில் ஒரு வீடும், வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் அவுரந்துலாவ கிராம அலுவலர் பிரிவில் 8 வீடுகளும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் சூடுவெந்தபுலவு கிராம அலுவலர் பிரிவில் 02 வீடுகளும், பாவற்குளம் படிவம் 02 கிராம அலுவலர் பிரிவில் ஒரு வீடும் என 57 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருந்தன.

இவ்வாறு மரணமடைந்த குடும்பத்திற்கும், பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கும் இழப்பீடுகள் வழங்க மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

(வவுனியா விசேட நிருபர்)

Wed, 04/15/2020 - 11:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை