ரூ.3270 மில். பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

இலங்கையிலிருந்து 548 கடல் மைல் (சுமார் 985 கி.மீ) தொலைவில் அமைந்துள்ள ஆழ்கடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, 260 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் 56 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

3,270 மில்லியன் ரூபா பெறுமதியுடைய போதைப்பொருளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
அத்தோடு ஈரானியர்கள் என்று சந்தேகிக்கப்படும் 07 பேரைக் கைது செய்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

நேற்று (10) காலை எந்தவிதமான அரச இலச்சினை கொண்ட  கொடியையும் கொண்டிராத கப்பலொன்றை வழிமறித்து சோதனையிட்டபோது, அதில் போதைப்பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.

இதற்கு முன்னர் இவ்வருடம், கடலில் கைது செய்யப்பட்ட 3 கப்பல்களைச் சேர்ந்த நபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போதான தகவல்கள், சர்வதேச தகவல் பரிமாற்றம், செய்மதி தொலைபேசி தரவுகளின் அடிப்படையில், இலங்கை கடற்படையினரால் இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இத்தகவல்களின் அடிப்படையில், மார்ச் 30 ஆம் திகதி முதல் இலங்கை கடற்படையினரால் 14 நாட்களாக ஆழ்கடலில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது இக்கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளதாக, கடற்படை தெரிவித்துள்ளது.

Sat, 04/11/2020 - 11:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை