மினி சூறாவளி; சேதமடைந்த 27 வீடுகள் இராணுவத்தால் புனரமைப்பு

நோர்வூட், சென்ஜோன் டிலரி பகுதியில் மினி சூறாவளியினால் பாதிக்கப்பட்ட 27 வீடுகள் இராணுவத்தினரால் இன்று (16) புனரமைக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து அம்மக்கள்,  இராணுவத்திற்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.  

குறித்த பகுதியில் நேற்று முன்தினம் (14) மாலை  கடும் மழையுடன் பலத்த காற்று வீசியதன் காரணமாக தோட்டத் தொழிலாளர்களின் தொடர் குடியிருப்புகள் உட்பட 27 வீடுகளின் கூரைகள் காற்றினால் அள்ளுண்டுள்ளன.

இந்த வீடுகளில் வாழ்ந்த சுமார் 27 குடும்பங்களைச் சேர்ந்த 126 பேர் பாதிக்கப்பட்டனர்.

இதில் 05 வீடுகளின் கூரைகள் முற்றாகவும் ஏனைய வீடுகளின் கூரைகள் பகுதியளவிலும்  சேதத்திற்கு உள்ளாகின.

இதனை தொடர்ந்து குறித்த இடத்திற்கு சென்று நிலைமையை பார்வையிட்ட நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே. ரவி, தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இது தொடர்பில் அவர்,  நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்திற்கு அறிவித்த நிலையில், லக்‌ஷபான இராணுவ  முகாமிலிருந்து இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட வீடுகளை புனரமைத்துள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்ட ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர் அத்தோட்டத்தில் உள்ள மருந்தகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கு தேவையான உதவிப் பொருட்கள்,  நோர்வூட் பிரதேச சபையின் தலைவரின் தலைமையில் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இவர்களுக்கான சமைத்த உணவினை அம்பகமுவ பிரதேச இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கிராம சேவகர் மற்றும் தோட்ட நிர்வாகத்தின்  ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை கண்டறிவதற்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவ்விடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளதுடன் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறும் உத்தரவிட்டிருந்தார்.

(ஹட்டன் கே. சுந்தரலிங்கம் விசேட நிருபர்)

Thu, 04/16/2020 - 14:57


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை