ஏப். 21 தாக்குதலின் பின் இரண்டாவது தாக்குதலுக்கும் திட்டம்

Rizwan Segu Mohideen
ஏப். 21 தாக்குதலின் பின் இரண்டாவது தாக்குதலுக்கும் திட்டம்-2nd Attack Also Planned After Easter Sunday Attack

➡️ விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது
➡️ சட்டத்தரணியின் கைது வெறுமனே தொடர்புகள், தொலைபேசி அழைப்பு தொடர்பானவை அல்ல
➡️ ஸஹ்ரான் ஹாசிமின் குழு பிளவடைந்தது நாடகம்
➡️ ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்கு காரணங்கள் இல்லை
➡️ மைத்திரிக்கு எதிராக எவ்வித விசாரணைகளும் இல்லை
➡️ பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர தொடர்பில் விசாரணை வேறாக இடம்பெறுகின்றது
➡️ வெளிநாட்டில் தாக்குதல் மேற்கொள்பவர்களுக்கு அடைக்கலம் வழங்கவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது

கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் பின்னர், திட்டமிடப்பட்ட இரண்டாவது தாக்குதல் குறித்து விசாரணைகள் மூலம் தகவல்கள் வெளிவந்துள்ளதாக, ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்

இன்று (19) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாணர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இதனைத் தெரிவித்தார்

அதற்கமைய, இரண்டாவது தாக்குதலைத் திட்டமிட்டமிட்டமை தொடர்பில் பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த தாக்குதல் தொடர்பில் தற்போது மேற்கொள்ளப்பட்ட கைது தொடர்பில் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களிலும் பல்வேறு கருத்துகள் நிலவி வருவதாக அவர் தெரிவித்தார்.

அதற்கமைய, தற்போது கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி, அவரது தொழில் ரீதியான சம்பந்தத்தின் அடிப்படையில் பேணிய தொடர்பு மற்றும் தொலைபேசி அழைப்புகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது. ஆயினும் வெறுமனே அவ்வாறான விடயத்தின் அடிப்படையில் இக்கைது மேற்கொள்ளப்படவில்லை எனவும் அதனை குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) முற்றாக நிராகரிப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

அத்துடன் போதிய ஆதாரங்கள், பல சாட்சியங்கள், விசாரணைகள், பல தொலைபேசி அழைப்பு விபரங்கள்  போன்றன ஆராயப்பட்டு அதன் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

CIDயினர் வெறும் தொலைபேசி அழைப்புகள், வெறும் முறைப்பாடுகளுக்கு அமைய எப்போதும் கைதுகளை மேற்கொண்டதில்லை என அவர் இதன்போது தெரிவித்தார்.

அத்துடன், ஒரு சில அமைப்புகளை ஆரம்பித்து அதற்கு தலைமைத்துவம் வழங்கி, அதற்கு நிதியுதவி வழங்கிய நபர்கள் தொடர்பில் தற்போது இடம்பெற்று வரும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் அவ்வாறானோரும் தற்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்,

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் பயங்கரவாத தலைவர் ஸஹ்ரான் ஹாசிமின் குழு இரண்டாக பிளவுபட்டதோடு, அதில் ஒரு குழு பிரிந்து சென்றதோடு, மற்றைய குழுவே இவ்வாறான தாக்குதலை மேற்கொண்டதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

ஆயினும் புலனாய்வுப் பிரிவினரை திசைதிருப்புவதற்காக இவ்வாறான பிளவை அவர்கள் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளதாகவும் இதன் மூலம் இவ்விசாரணைகளை திசைதிருப்ப முயன்றுள்ளதாகவும் அதற்கமைய, தற்போது அது தொடர்பில் புதிதாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் முஸ்லிம் தீவிரவாதத்தை ஏற்படுத்துவதற்காக சில அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளமை மற்றும் இஸ்லாத்தை தவறான விளக்கங்கள் மூலம் வெளிப்படுத்தி ஒரு சில இளைஞர்களை பிழையாக வழி நடாத்திச் சென்றுள்ளதாகவும், இதில் இக்குண்டுதாரிகள் நேரடியாக தொடர்புபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது கைதானவர்கள் இவ்வாறான அமைப்புகளுடன் தொடர்புபட்டுள்ளதாகவும், இதன் மூலம் முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலை அடுத்து, மற்றுமொரு தினத்தில் இன்னுமொரு தாக்குதலை நடாத்த திட்டமிட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்ததோடு, CIDயின் விசாரணைகளை அடுத்து அவ்வாறான திட்டம் தடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் அவ்வாறான திட்டத்திற்கு உதவி ஒத்தாசை, அதனைத் தூண்டியமை உள்ளிட்ட விடயங்களை மேற்கொண்டவர்கள் தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும்
அவர் தெரிவித்தார்.

அத்துடன் தெற்காசிய வலயத்திலுள்ள நாடொன்றில் மேற்கொள்ளப்படும் தாக்குதலொன்றை அடுத்து, அதனை மேற்கொள்ளும் ஒரு சில வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை, இரகசியமாக இலங்கைக்கு அழைத்து வந்து பாதுகாப்பாக வைத்திருக்க உதவுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தமை தொடர்பில் தகல்வகள் வெளிவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனவே, CID யினர் இவ்வாறான விடயங்களின் அடிப்படையில் அன்றி, தொழில் ரீதியாகவோ, தனிப்பட்ட நபர்கள் தொடர்பிலேயோ கைதுகளை மேற்கொள்வதில்லை என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் ஓரிரு மாதங்களில் இடம்பெற்ற விசாரணைகளின்போதும், குறித்த சட்டத்தரணி விசாரணைக்குட்படுத்தப்பட்டதாகவும் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். புதிய விசாரணைகளின் அடிப்படையிலேயே அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த சட்டத்தரணியுடன் இவ்வாறான தொடர்புகள் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா, என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

குறித்த சட்டத்தரணியை கைது செய்வதற்கு போதிய விடயங்களின் அடிப்படையிலேயே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதனை உறுதிப்படுத்தும் நடவடிக்கை நீதிமன்றின் மூலமே மேற்கொள்ளப்படும் என, ஜாலிய சேனாரத்ன இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்கான எவ்வித சான்றுகளும் காணப்படவில்லையா எனவும், சமூகத்தில் அவ்வாறான கதைகள் காணப்படுவதாகவும் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஜாலிய சேனாரத்ன, "அவ்வாறான கருத்து சமூகத்தில் காணப்படலாம். ஆயினும் சாட்சியங்கள் மற்றும் காரணங்களின் அடிப்படையிலேயே CID யினர் விசாரணைகள் மற்றும் கைது நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். ஏதாவது நபர் தொடர்பில் சாட்சியங்கள், காரணங்கள் காணப்படுமாயின் மாத்திரம் நடவடிக்கை எடுக்கப்டும்" என்றார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தடுக்கத் தவறியமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக எவ்வித பொலிஸ் விசாரணைகளும் இடம்பெறவில்லை என, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.

பொலிஸ் மஅதிபர் பூஜித் ஜயசுந்தர தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகள் உயிர்த்த ஞாயிறு தொடர்பானவை அல்ல எனவும், தனது கடமையைத் தவறியமை தொடர்பில் எனவும், அது வேறு குற்றத்தின் அடிப்படையிலானது எனவும் அவ்விசாரணை வேறாக இடம்பெறுவதாகவும் அவர் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்தார்.

Sun, 04/19/2020 - 19:23


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை