மன்னாரில் 20ம் திகதி முதல் ஊரடங்கை தளர்த்த சிபாரிசு

ஜனாதிபதிக்கு அரச அதிபர் தெரிவிப்பு

மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கை தளர்த்துவது தொடர்பாக ஜனாதிபதிக்க சிபாரிசு செய்யவுள்ளதாக மாவட்ட அரச அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடல்களை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,

மன்னார் மாவட்டத்தில் நெல் மற்றும் அரிசியின் உத்தரவாத விலையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பாவனையாளர் அதிகார சபை உத்தியோகத்தர்கள் கேட்டுக் கொண்டமைக்கு அமைவாக மீளவும் மில் உரிமையாளர்கள், பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் மற்றும் தனியார் வர்த்தக நிலைய உரிமையாளர்களை அழைத்து கலந்துரையாடினோம்.

ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வெள்ளை நாடு மற்றும் வெள்ளைச் சம்பா அரிசிகளின் விலை வர்தமானி அறிவித்தலை விட அதிகமாக இருப்பதாக பாவனையாளர் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் எனது கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இவ் விடயம் தொடர்பில் பாவனையாளர் அதிகார சபையின் உதவி பணிப்பாளருடன் கலந்துரையாடினேன். இதன்போது நாட்டுச் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் மாவட்ட மட்டத்தில் தீர்மானத்தை எடுத்து அறிவித்தல் வழங்குமாறு கோரியிருந்தனர். அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

வெள்ளை நாடு மற்றும் வெள்ளைச் சம்பா அரிசி மொத்த விலையில் 95 ரூபாவிற்கும் சில்லரையாக 100 ரூபாவிற்கும் விற்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.குறித்த விலைக்கு மேலே எந்த ஒரு பிரதேசத்திலும் கூடுதலாக விற்பனை செய்ய முடியாது.

சிவப்பு மற்றும் வெள்ளை கீரிச் சம்பா அரிசிகள் நிவாரணத்திற்கு விநியோகிப்பது இல்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாவின் உத்தரவாத விலை 86 ரூபாய். சீனி 125 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்ய முடியாது. சோயா மீட், தேயிலை, சவர்க்காரம் போன்றவை நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்ய வேண்டும். குறித்த நடைமுறை தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஊரடங்குச் சட்டத்தை எவ்வாறு தளர்த்திக் கொள்ளுவது என்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அதற்கான சிபாரிசு கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தி குறிப்பிட்ட எண்ணிக்கையில் அரச ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைப்பது, சுழற்சி முறையில் வர்த்தக நிலையங்களை திறத்தல், அத்தியாவசிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், சமூக இடைவெளிக்கு அமைவாக வியாபாரம் உட்பட ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்வது, மக்கள் ஒன்று கூடுவதை தடுப்பது, மக்கள் முழுமையாக வீடுகளில் இருந்து வெளியில் செல்லாது ஒரு வீட்டில் இருந்து ஒருவர் இல்லது இருவர் மாத்திரமே வெளியில் செல்வது என்பன போன்ற நடவடிக்கைகளை பொலிஸாரின் உதவியுடன் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார். 

மன்னார் குறூப் நிருபர்

Sat, 04/18/2020 - 09:23


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை