கடமைக்கு இடையூறு; கைதான ரஞ்சனுக்கு ஏப். 20 வரை விளக்கமறியல்

கடமைக்கு இடையூறு; கைதான ரஞ்சனுக்கு ஏப். 20 வரை விளக்கமறியல்-Ranjan Ramanayake Remanded Till Apr 20-Obstructing Duties of Police

பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில், கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இம்மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

அவர் இன்றையதினம் (14) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு இவ்வாறு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது..

ஐ.தே.க. முன்னாள் எம்.பி. ரஞ்சன் ராமநாயக்க, பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில், மாதிவலவிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வீட்டுத் தொகுதியில் வைத்து நேற்று (13) மாலை 7.00 மணியளவில் மிரிஹான பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் நேரடி வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை தொடர்பில், பொருட்களை ஏற்றி வந்த வாகனம் ஒன்றை தனது வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்காததால், பொலிஸாருடன் வாக்குவாதம் செய்ததாகக் கூறுகின்றார்.

ஆயினும் வேன் ஒன்றில் வந்த அவரது உடற்பயிற்சி சிகிச்சையாளர் (Physiotherapy) என தெரிவிக்கப்படும் நபர் ஒருவர் ஊரடங்கு அனுமதிப்பத்திரமின்றி, மாதிவெலவிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வீட்டுத் தொகுதியில் நுழைய முற்பட்ட வேளையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

குறித்த நபர், எம்பிலிபிட்டியவிலிருந்து பிலியந்தலைக்கு உலர் உணவு போக்குவரத்து செய்வதற்கு வழங்கப்பட்ட ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி, உலர் உணவுப் பொருட்கள் எதுவும் இன்றிய வேன் ஒன்றில் பிலியந்தலையிலிருந்து மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர் கட்டடத் தொகுதிக்குள் நுழைய முற்பட்ட வேளையில் அவரை பொலிஸார் விசாரித்துள்ளனர்.

இதன்போது அவ்விடத்திற்கு வந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்து, அவர்களை திட்டியுள்ளார். இது தொடர்பில் அங்கு கடமையிலிருந்து பொலிஸார் ஒருவர் அவரது தொலைபேசியில் வீடியோ ஒன்றையும் எடுத்துள்ளார்.

இதேவேளை, கடந்த வியாழக்கிழமை (09) இரவு, ரஞ்சன் ராமநாயக்கவும் பொலிஸாரும் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோவொன்றை நேரடியாக வெளியிட்டிருந்தார். இதன்போது அரிசி மற்றும் மரக்கறிகள் உள்ளிட்ட லொறியொன்றை மாதிவலவிலுள்ள அவரது வீட்டு வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் ஐ.தே.க.வின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தேரவப்பெருமவினாலும் நேற்றுமுன்தினம் (12) சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அவரது நிவாரணப் பணிகளை நிறுத்த பொலிசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tue, 04/14/2020 - 13:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை