போக்குவரத்து விதி மீறல் தண்டப்பணம்; மே 02 வரை செலுத்த சலுகை

போக்குவரத்து விதி மீறல் தண்டப்பணம்; மே 02 வரை செலுத்த சலுகை-Traffic Fine Payment Due on May 02

ஊரடங்கு அமுலில் உள்ள மாவட்டங்களில் பின்னர் அறிவிக்கப்படும்

2020 மார்ச் மாதம் 01ஆம் திகதி அல்லது அதன் பின்னர் வழங்கப்பட்டுள்ள போக்குவரத்து விதிமீறல் தொடர்பான தண்டப்பணத்தை (Spot Fine) எந்தவித மேலதிக தண்டப்பண அறவீடும் இன்றி மே மாதம் 02ஆம் திகதி வரை செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மாஅதிபரின் இணக்கப்பாட்டின் கீழ், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

தபால் மாஅதிபர், ரஞ்சித் ஆரியரத்னவினால் இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பில், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து விதி மீறல் தொடர்பான தண்டப்பணத்தை, மேலதிக தண்டப்பணம் அறவிடப்படாமல் செலுத்துவதற்கான கால எல்லையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரினால் 2020 மார்ச் மாதம் 01ஆம் திகதி அல்லது அதன் பின்னர் வழங்கப்பட்டுள்ள ஸ்தலத்தில் விதிக்கப்படும் தண்டப்பணத்தை (Spot Fine) எந்தவித மேலதிக தண்டப்பண அறவீடும் இன்றி மே மாதம் 02ஆம் திகதி வரை செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று பெப்ரவரி 16 - பெப்ரவரி 29, காலப் பகுதியில் விதிக்கப்பட்ட தண்டப்பணச் சீட்டானது, உரிய மேலதிக அபராதத்துடன் செலுத்த வேண்டும் எனவும், அதனையும் மே 02ஆம் திகதி வரை செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சலுகைக் காலம் எதிர்பரும் மே 02ஆம் திகதி வரை மட்டுமே எனவும், அக்காலப் பகுதிக்குள் அதனை செலுத்துமாறும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்கள் தொடர்பான சலுகைக் காலமானது, அம்மாவட்டங்களில் தபாலகம் மற்றும் உப தபாலகங்கள் திறக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tue, 04/21/2020 - 16:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை