எட்டு பேரை பிடிக்க சி.ஐ.டி குழுக்கள் சல்லடைத் தேடுதல்

ரவி தொடர்ந்தும் தலைமறைவு

மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் எட்டுப் பேரை பிடிப்பதற்காக குற்ற விசாரணை திணைக்களம் (சி ஐ. டி) இரண்டு குழுக்களை ஈடுபடுத்தியுள்ளது.

அதேவேளை, ரவி கருணாநாயக்கவும் மற்றைய எட்டு சந்தேகநபர்களையும் தேடி பொலிஸார் அவர்களது வீடுகளுக்குச் சென்ற போது அவர்கள் அங்கு இருக்கவில்லையென்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன ‘தினகரனுக்கு’ கூறினார்.

சந்தேகநபர்களின் குடும்ப அங்கத்தவர்களிடம் கேள்வி எழுப்பினீர்களா என்று கேட்கப்பட்ட போது அவ்வாறான செயற்பாடு இடம்பெறவில்லையென்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

2015 இல் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி ஊழல் தொடர்பாக ரவி கருணாநாயக்க மற்றும் ஒன்பது பேர் மீது கொழும்பு கோட்டை மாஜிஸ்ரேட் கடந்த வெள்ளிக்கிழமை பிடியாணை பிறப்பித்திருந்தது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து சி.ஐ.டி. பொலிஸார் நேற்று முன்தினம் (7) முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை தேடி பத்தரமுல்ல ரஜமல்வத்தையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். எனினும் அச்சமயம் முன்னாள் அமைச்சர் அங்கு இருக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பத்து சந்தேக நபர்களில் ஒருவரான பெர்பெச்சுவல் டிரெஸரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான முத்துராஜா சுரேந்திரன் சி. ஐ. டி. யினரால் கைது செய்யப்படடுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன, ஜொப்ரி அலோசியஸ், ரஞ்சன் ஹுலுகல்ல, முத்துராஜா சுரேந்திரன், அஜஹான் புஞ்சிஹேவா, எஸ். பத்மநாதன் மற்றும் இந்திக சமன்குமார ஆகிய பத்து பேரை கைது செய்யுமாரே பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இவர்களில் பலர் பிணைமுறி விவகாரத்துடன் தொடர்பான விசாரணை நடத்தும் முன்னர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தமது சாட்சியங்களைப் பதிவு செய்தவர்களாவர்.

 

Mon, 03/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை