நுவரெலியா மாவட்டத்தில் அமோக வெற்றிபெறுவோம்

லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் அமோக வெற்றிபெறும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

லங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் அடங்கிய வேட்புமனு நேற்று நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.பி. ரட்னாயக்க, சட்டத்தரணி ராஜதுரை ஆகியோரும் அமைச்சருடன் பிரசன்னமாகியிருந்தனர்.

வேட்புமனு தாக்கலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட தொண்டமான், பொதுத் தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டியிடும் நாம் அமோக வெற்றிபெறுவோம். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மொட்டு கூட்டணியில் இருப்பதால் நுவரெலியா மாவட்டத்திலும் வெற்றி உறுதி.

அதேவேளை, 'கொரோனா' வைரஸ் தொற்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் மக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாத வகையில் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மலையகத்தில் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். பொது இடங்களில் கூட்டமாக கூடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கின்றேன்.

அத்துடன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது என்றார்.

ஹற்றன் சுழற்சி, விசேட நிருபர்கள்

Wed, 03/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை