தேசிய இளைஞர் விளையாட்டு விழா: றிஸ்வானுக்கு வெண்கலப்பதக்கம்

அநுராதபுரம் விளையாட்டரங்கில் நடைபெற்ற 31ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் மெய்வல்லுநர் போட்டிகளில் அம்பாரை மாவட்டம் சார்பாகக் கலந்து கொண்ட அட்டாளைச்சேனை லக்கி இளைஞர் கழகத்தைச் சேர்ந்த ஏ.எம்.எம்.றிஸ்வான் 20வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான முப்பாய்ச்சல் நிகழ்ச்சியில் வெண்கலப்பதக்கத்தைப் பெற்றுள்ளார்.

மெய்வல்லுநர் துறையில் அண்மைக்காலமாக திறமைகளை வெளிக்காட்டி வரும் ஏ.எம்.எம்.றிஸ்வான் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் 13.43 மீற்றர் தூரம் பாய்ந்தே வெண்கலப்பதக்கத்தினைப் பெற்றுள்ளார். 13.43 மீற்றர் தூரத்தை இரண்டு வீரா்கள் பாய்ந்திருந்த போதிலும் தவறுகள் அடிப்படையில் றிஸ்வானுக்கு மூன்றாமிடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.

2019ம் ஆண்டுக்கான அம்பாரை மாவட்ட இளைஞர் விளையாட்டு விழாவில் முப்பாய்ச்சல் நிகழ்ச்சியில் 13.33 மீற்றர் தூரம் பாய்ந்து முதலாமிடத்தைப் பெற்று தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் கலந்து கொள்ளும் தகுதியைப் பெற்றிருந்தார். அத்தோடு 110 மீற்றர் தடைதாண்டல் மற்றும் உயரம் பாய்தல் போட்டி நிகழ்ச்சிகளிலும் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றிருந்தார்.

31 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் முப்பாய்ச்சல், உயரம் பாய்தல்,110 மீற்றர் தடைதாண்டல் மற்றும் 4 X 400 மீற்றர் அஞ்சல் ஓட்டக்குழுவிலும் ஏ.எம்.எம்.றிஸ்வான் கலந்து கொண்டிருந்தார்.

அதிலும் 110 மீற்றர் தடைதாண்டல் ஓட்டத்தில் பதக்கம் ஒன்றினைப் பெறுவார் என றிஸ்வான் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அவ ரால் நான்காவது இடத்தையே பெற முடிந்தது. 4X400 மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் பங்கேற்ற றிஸ்வான் மிகச்சிறப்பாக ஓடிய போதிலும் இறுதியாக ஓடிய வீரரின் சறுக்கல் காரணமாக அதிலும் பதக்கம் பெறும் வாய்ப்பும் இல்லாமல் போனது.

குறிப்பாக 4X 400 அஞ்சல் ஓட்டக்குழுவில் இடம்பெற்றிருந்த அம்பாரை மாவட்ட வீரர் ஒருவர் தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டியில் கலந்து கொள்ளாமல் இடைநடுவில் கொழும்பு சென்றதாக அறியவருகின்றது. இது தொடர்பில் பலரும் தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் அம்பாரை மாவட்டத்திற்குக் கிடைக்க வேண்டிய ஒரு பதக்கம் இல்லாமல் போய்விட்டது.

கடந்த 2018ம் ஆண்டு 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான 4X 400 மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் அம்பாரை மாவட்டம் வெள்ளிப்பதக்கத்தினைப் பெற்றிருந்தது. அந்தக் குழுவில் ஏ.எம்.எம்.றிஸ்வானும் இடம்பெற்றிருந்தார்.

தேசிய மட்டத்தில் இரண்டாவது பதக்கத்தைப் வென்றடுத்துள்ள றிஸ்வான் தனிப்பட்ட போட்டி நிகழ்ச்சியில் பெற்ற முதலாவது பதக்கம் இதுவாகும்.

விளையாட்டுத்துறையில் மிகுந்த விருப்புடன் ஈடுபட்டுவரும் ஏ.எம்.எம்.றிஸ்வான் கடந்த மூன்று வருடங்களாக மாகாண மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார்.

ஆண்களுக்கான 110 மீற்றர் தடைதாண்டல் மற்றும் 4X 100 மீற்றர், 4தர 400 மீற்றர் அஞ்சல் ஓட்டத்திலும் முதலாமிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் மற்றும் அந்நூர் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவரான ஏ.எம்.எம்.றிஸ்வான் அட்டாளைச்சேனை லக்கி விளையாட்டுக் கழகத்தின் மெய்வல்லுநர் அணியின் தலைவராகவும், லக்கி இளைஞர் கழகத்தின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார்.

அட்டாளைச்சேனை விசேட நிருபர்

Fri, 03/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை