சவூதி மன்னர் சல்மானின் சகோதரர், மருமகன் கைது

சவூதி அரேபிய மன்னர் சல்மானின் இளைய சகோதரர் இளவரசர் அஹமது பின் அப்துலஸீஸ் மற்றும் மன்னரின் மருமகன் முஹமது பின் நயெப் ஆகிய அரச குடும்பத்தின் இரு மூத்த உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக அதனுடன் தொடர்புடைய வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டது தொடர்பான குற்றச்சாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டதாக வோல் ஸ்ட்ரீட் ஜெர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதில் உள்துறை அமைச்சின் பல டஜன் அதிகாரிகள், இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் மேலும் பல சந்தேக நபர்களும் சிக்கி இருப்பதாக அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

தேசத்துரோக குற்றச்சாட்டில் அரச குடும்பத்தின் இரு மூத்த உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டதாக ப்லுௗம்பேர்க் பத்திரிகை செய்தியும் குறிப்பிடுகிறது. இதில் மொஹமட் நயெப்பின் இளைய சகோதரரான இளவரசர் நவாப் பின் நயெப்பும் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. எனினும் இது பற்றி சவூதி நிர்வாகம் உடன் எந்தக் கருத்து வெளியிடவில்லை.

சவூதி மன்னர் சல்மான் மற்றும் அவரது மகனான முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மான் தமது அதிகாரத்தை பலப்படுத்தும் முயற்சியாகவே இந்த புதிய கைது நவடிக்கைகள் பார்க்கப்படுகிறது.

2017ஆம் ஆண்டு தனது ஒன்றுவிட்ட சகோதரர் முஹமது பின் நயெப்பிடம் இருந்து முடிக்குரிய இளவரசர் பதவியை பெற்றபின் முஹமது பின் சல்மான் சவூதியில் தனது பிடியை இறுக்கி வருகிறார். 2017ஆம் ஆண்டு கடைசியில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எனக் கூறி பல டஜன் அரச குடும்பத்தினர் மற்றும் வர்த்தகர்களை கைது செய்தார்.

மன்னர் சல்மானின் உயிர்வாழும் ஒரே உடன்பிறந்த சகோதரரான இளவரசர் அஹமது அடுத்த மன்னராவதற்கு ஆதரவாக அரச குடும்பத்திற்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

முஹமது பின் சல்மானை முடிக்குரிய இளவரசராக நியமிப்பதற்கு தமது ஆதரவை வெளியிடாத ஆளும் சவூத் குடும்ப மூத்த உறுப்பினர்களில் ஒருவராகவும் அவர் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் முடிக்குரிய இளவரசர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது தொடக்கம் முஹமது பின் நயெப்பின் செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தார்.

Mon, 03/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை