ஊடகவியலாளர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியமாகும்

நோயைக் கட்டுப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள தேசிய இயக்கம் தினமும் ஊடக கலந்துரையாடல்களை நடத்துகின்றது. அங்கு முன்வைக்கப்படும் தகவல்கள் மக்களைச் சென்றடைய வேண்டியது கட்டாயமாகும். எனினும், அவ்வாறான செய்தியாளர் மாநாடுகளில் பங்கேற்கும் அலுவலக, பிராந்திய ஊடகவியலாளர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியமாகும் என ஊடக அமைப்புகளின் கூட்டணி விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம், ஊடக ஊழியர்களின் தொழிற்சங்க சம்மேளனம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம், தமிழ் ஊடக ஒன்றியம், ஸ்ரீ லங்கா இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் ஆகிய ஊடக அமைப்புக்கள் இணைந்து இந்த அறிக்கையை விடுத்துள்ளது.

இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கோவிட்-19வைரஸ் உலக அளவில் பரவிவரும் இந்த சூழ்நிலையில் இலங்கைக்கும் அதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. இவ்வாறான பின்னணியில் சரியான மற்றும் நம்பிக்கையான செய்திகளை வெளியிடுவது மக்களின் தகவல் அறிந்துகொள்ளும் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் அனைத்து ஊடகங்களும் மேற்கொள்ளும் நடவடிக்கை பொறுப்பு மற்றும் பாராட்டத்தக்கதாகும். நாட்டு நிலைமை சீராகும் வகையில் ஊடகங்களுக்குள்ள அந்தப் பொறுப்பை முறையாக நிறைவேற்றி, இந்த அனர்த்தத்துக்கு எதிராக செயற்பட வேண்டும் என்பதே இலங்கையிலுள்ள ஊடக அமைப்புகளின் எதிர்பார்ப்பாகும். அதேநேரம், விசேடமாக பத்திரிகைத்துறை உட்பட ஊடகத்துறை மற்றும் அதன் இருப்பைப் பாதுகாத்துக் கொள்வது முக்கியமாகும் என்பதையும் நாம் வலியுறுத்துகின்றோம்.

எனவே, இந்த அனர்த்த நிலைமையில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய மற்றும் செயற்படுத்த வேண்டிய விடயங்களை இங்கே உங்களது அவதானத்துக்குக் கொண்டுவருகின்றோம்.

இலங்கை அரசாங்கம் வீட்டிலிருந்து பணியாற்றும் காலத்தை பிரகடனப்படுத்தியுள்ள நேரத்தில், அத்தியாவசியமான பணியாளர்களையும் ஊடகவியலாளர்களையும் நிறுவனத்திற்கு அழைத்தும், ஏனையோருக்கு ஒன்லைன் மூலம் வேலை செய்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வதன் மூலம் அவர்கள் பாதிக்கப்படுவதும் மற்றும் நோய்ப் பரவுதலும் கட்டுப்படுத்தப்படுகின்றது.

பத்திரிகைகள் வெளியிடும் போது மக்களிடையே வைரஸ் பரவல் ஏற்படுவதைத் தடுக்க உரியவர்களின் ஆலோசனைகளைப் பெறும் அதேவேளை, இலத்திரனியல் உபகரணங்களின் பாவனையிலும் உரிய தரத்துடன் மேற்கொள்ள ஆலோசனை வழங்குதல் முக்கியமாகும்.

அனைத்து ஊழியர்களினதும் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களில் வைரஸ் நீக்கம் செய்யப்படுவது அவசியமாவதுடன், அலுவலக இயந்திரங்களைச் சுத்தம் செய்யும் போதும் அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வது முக்கியமாகின்றது.

நோயைக் கட்டுப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள தேசிய இயக்கம் தினமும் ஊடக கலந்துரையாடல்களை நடத்துகின்றது. அங்கு முன்வைக்கப்படும் தகவல்கள் மக்களைச் சென்றடைய வேண்டியது கட்டாயமாகும். எனினும், அவ்வாறான செய்தியாளர் மாநாடுகளில் பங்கேற்கும் அலுவலக, பிராந்திய ஊடகவியலாளர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.

விசேடமாக தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மைக்ரபோன் பாவனையுடன் அதிகாரிகளுடனும் பொதுமக்களுடனும் நெருங்கி தகவல்களைக் கோரும் சந்தர்ப்பத்தில், சிலபோது மருத்துவ முகக்கவசம் அணிந்தும், அணியாமலும் செயற்படுவதைத் தொலைக்காட்சிகளில் காணமுடிந்தது. இவ்விடயத்தில் ஊடகவியலாளர்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்பதோடு மைக்ரபோனை உரிய விதத்தில் சுத்தப்படுத்தி பயன்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.

கோவிட்-19வைரஸின் ஆயுட்காலம் சில மணிநேரங்கள் அல்லது சில நாட்களாக இருக்கக் கூடும் என்றும் அது பல்வேறு பதார்த்தங்களோடு பரவக்கூடிய வாய்ப்பிருப்பதாக வைத்திய அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே, நாடு பூராகவும் பகிர்ந்தளிக்கப்படும் பத்திரிகைகள் மூலம் வைரஸ் பரவாதிருப்பதை உறுதி செய்வது மக்களின் பாதுகாப்புக்கான உத்தரவாதமென்று நாம் கருதுகின்றோம். உங்கள் ஊடகத்தின் இணையத்தளம் மற்றும் ஏனைய இலத்திரனியல் தளங்கள் மூலம் பொதுமக்களுக்கு செய்திகள் சென்றடைய வழிவகைகளை மேற்கொள்வதோடு, பத்திரிகைகளை பகிர்ந்தளிக்கும் போது அதிக பொறுப்புடன் செயற்படல் வேண்டும்.

இந்த அனர்த்த சூழ்நிலையில் மேற்படி விடயங்களில் உங்கள் பங்களிப்பானது முழு நாட்டு மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்பதை நினைவுகூறுகின்றோம். எனவே, ஊடக அமைப்புகளின் கூட்டணி மூலம் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களில் அதிக கவனம் செலுத்துமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Mon, 03/23/2020 - 20:01


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக