மக்களின் அநாவசியமான நடமாட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை

வீதியோரங்களில் அநாவசியமாக நடமாடி திரிகின்றவர்களின் விபரங்களை பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர் சேகரித்து வருகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை,  சம்மாந்துறை, சவளக்கடை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பிரதேசங்களில் ஊடரங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் வீணாக இளைஞர்கள் சிறுவர்கள் என   வீதிகளில்  ஒன்று சேர்வதை கட்டுப்படுத்த  இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்குறித்த பகுதிகளில் கிராம சேவகர்களின் உதவியுடன் சிசிடிவி காணொளி மற்றும் ஊடகவியலாளர்களினால் சேகரிக்கப்பட்ட ஒளிப்படங்களின் உதவியுடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.நேற்று (21) இரவு  முதல் இன்று (22) அதிகாலை  வரை பொலிஸாரும் முப்படையினரும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சில இடங்களில் பொலிஸார் இராணுவத்தினர் மீது கற்களை கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு தரப்பினரின் வேண்டுகோளிற்கு இணங்க கல்முனை, கல்முனை குடி, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு,மருதமுனை,சாய்ந்தமருது, பாண்டிருப்பு, பெரியநீலாவணை போன்ற மத வழிபாட்டு தலங்களில் கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம் ஒலிபெருக்கி வாயிலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் இரவு வேளையிலும் வீடு வீடாக கிராம சேவகர்களின் உதவியுடன் பொலிஸார் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்களின் விபரங்களை சேகரித்து வருகின்றனர்.

இதேவேளை பிரதான வீதிகளில் விசேட வீதிச் சோதனை நடவடிக்கைகளையும் இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர். அத்தியவசிய சேவையான சுகாதார சேவைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. கல்முனை வைத்திய சாலைகளுக்கு வரும் நோயாளர்கள் அவசர சிகிச்சை பிரிவுகள் ஊடாக சிகிச்சைகளை பெற்றுச் செல்வதையும் காணக்கூடிதாக இருந்தது.

பாறுக் ஷிஹான்

Sun, 03/22/2020 - 08:31


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை