இஸ்ரேல் பொதுத் தேர்தலில் பிரதமர் நெதன்யாகு வெற்றி

இஸ்ரேல் பொதுத் தேர்தலில் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளார். அடுத்த அரசை அமைப்பதில் அவர் வலுவான நிலையில் இருப்பதாக ஆரம்பக்கட்ட தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.  

கடந்த ஏப்ரல் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் நடைபெற்ற தேர்தல்களில் எவருக்கும் ஆட்சி அமைக்க போதுமான பெரும்பான்மை இல்லாத நிலையில் ஓர் ஆண்டுக்குள் மூன்றாவது தேர்தலாகவே கடந்த திங்கட்கிழமை இந்தத் தேர்தல் நடைபெற்றது.  

இந்நிலையில் நேற்று காலையாகும்போது மத்திய தேர்தல் குழுவினால் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில் 120 இடங்கள் கொண்ட பாராளுமன்றத்தில் நெதன்யாகுவின் வலதுசாரி லிகுட் கட்சி 36 மற்றும் 37 இடங்களை பெற்றிருப்பதாக ஆரம்பக் கட்ட முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி நெதன்யாகுவின் தலைமையின் கீழ் அந்தக் கட்சி பெற்ற சிறந்த பெறுபேறாக இது பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் 1996–1999 ஆம் ஆண்டுவரை பிரதமராக இருந்த நெதன்யாகு, 2009 தொடக்கம் மீண்டும் பிரதமராக செயற்பட்டு வருகிறார்.  

லிகுட் மற்றும் அதன் வலது சாரி கூட்டணி மொத்தம் 59 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் அந்தக் கூட்டணிக்கு ஆட்சி அமைப்பதற்கு தேவைப்படும் பெரும்பான்மைக்கு இரண்டு ஆசனங்களே குறைவாக உள்ளது.  

லிகுட் கட்சியின் பிரதான போட்டியாளரான மையவாத நீலம் மற்றும் வெள்ளை கட்சி 32 மற்றும் 34 ஆசனங்களை வென்றுள்ளது.  

அதன் மைய இதுசாரி கூட்டணி அதேபோன்று அரபுக் கூட்டணி, நெதன்யாகு எதிர்ப்பு முகாமை ஒன்றிணைத்து பாராளுமன்றத்தில் 54 தொடக்கம் 55 இடங்கள் பதிவாகியுள்ளன.  

நெதன்யாகு இன்னும் போதிய பெரும்பான்மையை பெறாத நிலையிலும் பெரும் வெற்றி என்று இந்த தேர்தல் முடிவை அறிவித்துள்ளார். “எனது வாழ்வில் இது முக்கியமான வெற்றி” என்று அவர் டெல் அவிவில் தமது ஆதரவாளர்கள் முன் தெரிவித்துள்ளார். நெதன்யாகு தன் மீதான ஊழல் வழக்கு விசாரணைக்கு முகம்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

“இஸ்ரேல் தேர்தலில் குடியேற்றம், ஆக்கிரமிப்பு மற்றும் பாகுபாடு வெற்றிபெற்றுள்ளது” என்று பலஸ்தீன விடுதலை அமைப்பின் செயலாளர் நாயகம் சயெப் எரகத் இந்த வெற்றி பற்றி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.  

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் யூதக் குடியேற்றங்கள் மற்றும் ஜோர்தான் பள்ளத்தாக்கை இஸ்ரேலுடன் இணைப்பதாக நெதன்யாகு தனது தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதி அளித்திருந்தார்.      

Wed, 03/04/2020 - 14:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை