வறியோருக்கு உணவு வழங்க ஆலயங்கள் முன்வர வேண்டும்

ஆலயங்களில் சமய நிகழ்வுகளுக்கு, திருவிழாக்களுக்கு என ஒதுக்கிய நிதியினை தினம் உழைத்து வாழ்பவர்களுக்கான அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு பயன்படுத்த முன் வர வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி.விக்கினேஸ்வரன் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் வணக்கத்தலங்கள் அனைத்தினதும் தர்மகர்த்தாக்களிடமும், மதத் தலைவர்களிடமும், வழிபாட்டாளர்களிடமும் ஒரு அன்பான வேண்டுகோள்.

இன்று வணக்க தலங்களில் நடைபெற வேண்டிய வருடாந்த திருவிழாக்கள், பூஜைகள், ஆராதனைகள், வழிபாடுகள் அனைத்தும் கொரோனாவின் நிமித்தம் ஸ்தம்பிதமாகியுள்ளன. யார் யாரை இந்த வைரஸ் அடுத்துத் தாக்கும் என்பது கேள்விக் குறியாகவுள்ளது. சமயச் சடங்குகளுக்காகப் பாவிக்கவிருந்த நிதியனைத்தும் செலவு செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன.

அதேநேரம் நாளாந்தம் கிடைக்கும் வருமானத்தில் தமது குடும்பங்களைப் பராமரிக்க வேண்டிய குடும்பத் தலைவர்கள், தலைவிகள் வீட்டுக்கு வெளியே செல்ல முடியாது தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

பலருக்கு தத்தமது ஊர்களில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல குடும்பங்கள் அடுத்தவேளை சாப்பாடு எங்கிருந்து கிடைக்கும் என்று ஏங்கிக் கிடக்கின்றனர். பலர் பட்டினியின் கோரப்பிடிக்குள் அகப்பட்டு தத்தளித்து வருகின்றனர்.

இந்த காலகட்டத்துக்குத்தான் 'மக்கள் சேவை மகேஸ்வரன் சேவை' என்ற முதுமொழி முற்றும் பொருந்துகின்றது. கோயில்களில் திருவிழாக்கள் செய்ய இருந்த உபயகாரர்கள், வணக்க தலங்களின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் மற்றும் அறநிலையக் காப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இன்று பட்டினியால் வாடும் பல வறிய குடும்பங்களுக்கு ஓரிரு வாரங்களுக்கேனும் பாவிக்கக்கூடிய உலர் உணவுப் பொதிகளை சமய காரணங்களுக்காக வைத்திருந்த தமது நிதியைப் பாவித்து வாங்கிக் கொடுக்க முன்வர வேண்டும்.

வேலனை குறூப் நிருபர்

Mon, 03/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை