சவால்களை எதிர்கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் தயாராகுங்கள்

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

பருப்பின் விலை 65 ரூபா

ரின் மீன் விலை 100 ரூபா

நாம் சவால்களுக்கு முகங்கொடுக்கத் தயார். அதற்காக ஒன்றிணைந்த செயற்பாடு எமக்கு முக்கியமாகிறது. இத்தகைய தருணத்தில் நாட்டு மக்கள் பொறுப்புடன் செயற்படவேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடு கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள செயற்பாடுகளை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,....

நாம் தேர்தல் நடத்தி புதிய நிலையான அரசாங்கமொன்றை ஸ்தாபித்து புதிய வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றி சுபிட்சமான நாடு என்ற கொள்கையின் கீன் மக்களுக்கு வாக்குறுதியளித்தற்கிணங்க நிவாரணங்களை வழங்குதல், வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தல், விவசாயத் துறையை மேம்படுத்தல் உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்காக மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள அனுபவமுள்ள அரசியல்வாதியான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நிலையான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு என்னோடு இணையுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இத்தகைய தருணத்தில் அரசாங்கத்தை சிறப்பாக முன்னெடுத்துச் செல்வது எமக்குள்ள முக்கிய பொறுப்பாகும். எத்தகைய காரணத்துக்காகவும் அரசாங்கம் சீர்குலைவதற்கு இடமளிக்க முடியாது. நாம் தூரநோக்கின்றி செயற்பட்டால் மக்களின் சாதாரண இயல்பு வாழ்க்கை முழுவதுமாக சிதைந்துவிடும். தலைவரென்ற வகையில் ஆத்ம நம்பிக்கையுடன் செயற்படுவது முக்கியம். அதற்கிணங்க மக்கள் மத்தியில் தேவையற்ற பயத்தை உருவாக்கக் கூடாது.

நாம் இத்தகைய தருணத்தில் மேற்கொள்ளவேண்டியது நாட்டிற்குள் கொரோனா வைரஸ் உள்வருவதும் நாட்டில் அவை பரவுவதற்கும் இடமளிக்காது அதனை கட்டுப்படுத்துவதாகும். அதற்காக மேற்கொள்ளவேண்டிய அனைத்தையும் நாம் இனங்கண்டு செயற்படுத்தி வருகின்றோம். அதற்காக நியமிக்கப்பட்டுள்ள செயலணிக்குத் தேவையான அதிகாரங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். நாம் இதற்கு முன்பும் சவால்களை வெற்றிகரமாக முகங்கொடுத்துள்ளோம். நாம் சவால்களுக்கு முகங்கொடுக்க தயார். அதற்காக ஒற்றுமையே எமக்கு அவசியமாகிறது. இத்தருணத்தில் மக்கள் பொறுப்புடன் செயற்படவேண்டுமென நான் கேட்டுக்கொள்கின்றேன்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

நேற்று (17) நள்ளிரவு முதல் அனைத்து வர்த்தக நிலையங்களிலும் ஒரு கிலோ பருப்பு உச்ச சில்லறை விலை 65 ரூபாவுக்கும் அதேபோன்று டின்மீன் ஒன்றின் விலை 100 ரூபாவுக்கும் விற்பனை செய்வதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம். அதற்கான பணிப்புரைகளை நான் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கியுள்ளேன். மேலும் பல நிவாரணங்களை விரைவில் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

நாட்டின் வர்த்தக முயற்சிகளுக்கு பெரும் சுமையாகியுள்ள வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை மீளச் செலுத்துவதற்கான காலத்தை ஆறு மாதங்களுக்கு நிறுத்துவதற்கு நான் பணிப்புரை விடுப்பேன்.

அதேபோன்று வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன்களுக்கு 4% வட்டியை மாத்திரம் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பேன். நாட்டு மக்கள் என்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு எந்த நேரத்திலும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பதற்கு நான் உறுதியளிக்கின்றேன். உங்களதும் என்னுடையதுமான நாடு இன்று பாதுகாப்பாகவேயுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், தற்போது 43 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. அதில் 19 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலிருந்து இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருமே இத்தாலியிலிருந்து நாடு திரும்பியவர்கள். ஏனையோர் தனிமைப்படுத்தலுக்கு முன்பதாகவே இலங்கை திரும்பியவர்களாவர். அரசாங்கமென்ற வகையில் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை முறையாக முன்னெடுத்துச் செல்வது எமது பொறுப்பாகும். மக்களின் பல்வேறு தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.(ஸ)

Wed, 03/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை