தேசிய பேரிடராக உணர்ந்து கட்சித் தலைவர்கள் ஒத்துழைக்க வேண்டும்

கொரோனா வைரஸ் பரவல் எமது நாட்டிலும் ஏற்பட்டுவிட்டது. அதிலிருந்து இனி விடுபட முடியாது. ஆனால், நோய் பரவல் மற்றும் அதில் ஏற்படும் பாதிப்பை குறைத்துக்கொள்ள முடியும். இதனை தேசிய பேரிடராக உணர்ந்து உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் துறைசார் நிபுணர்களை அழைத்து கூட்டுக் கலந்துரையாடல்கள் மூலம் ஒரு பொது வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரிக்க வேண்டுமென முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

அவர் நேற்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது,

கொரோனா வைரஸுக்கு முகங்கொடுப்பதே எம்முன்னுள்ள பாரிய சவாலாகும். கொரோனா வைரஸை ஒழிப்பதும் அதனைக் கட்டுப்படுத்துவதுமே இத்தருணத்தில் நாம் செய்ய வேண்டிய முதலாவது பணி. இது தேசிய பேரிடராகும். இதன் அபாயகரத்தை சிலர் இன்னமும் உணரவில்லை. இந்த தொற்றுநோயால் ஏற்படும் பாதிப்பை குறைத்துக்கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

இதனை எதிர்கொள்ள பொது வேலைத்திட்டமொன்றை தயாரித்து கூட்டாக நடைமுறைப்படுத்தும் அவசியம் பற்றி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசாங்கத்துக்கு அறிவுறுத்தியிருந்தேன். இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு தேர்தல் ஆணையாளருக்கும் அறிவித்திருந்தேன். அரசியல் கட்சிகளின் தலைவர், சமூக நிறுவனங்களின் தலைவர்களை அழைத்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டுமென பிரதமர் மற்றும் முன்னாள் சபாநாயகரும் கூறியுள்ளனர்.

இத்தருணத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான சில காரணிகள் உள்ளன.

சீனாவை மையப்படுத்தி உருவான கொரோனா வைரஸ் இன்று மேற்குலக நாடுகளில் தீவிரமாக பரவியுள்ளது. உலக சமூக பொருளாதார வலையமைப்பின் பிரதான நகரங்களாக லண்டன், பரிஸ் ஆகிய நகரங்கள் கொரோனா வைரஸ் பரவலின் மத்திய நிலையங்களாக மாறிவருவது குறித்து நாம் அவதானம் செலுத்த வேண்டும்.

தற்போது இத்தொற்று நோய் இலங்கையிலும் பரவியுள்ளது. அதிலிருந்து விடுப்பட முடியாது. என்றாலும்; குறைந்த பாதிப்புகளை மாத்திரம் எதிர்கொள்ளும் வகையில் நாம் இணைந்து பணியாற்ற வேண்டும்.

ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது எமது நாட்டின் சுகாதார வசதிகள் குறைவானதாகும். இத்தாலியையும் இலங்கையையும் ஒப்பிடுமிடத்து இத்தாலியில் இரண்டு இலட்சம் பேருக்கு 25 தீவிர சிகிச்சை பிரிவுக்கான கட்டில்கள் உள்ளன. ஆனால், இலங்கையில் இரண்டு இலட்சம் பேருக்கு ஒரு தீவிர பிரிவுக்கான கட்டில்தான் உள்ளது. சுவாசிப்பதை இலகுப்படுத்தும் இயந்திரங்கள் போதுமான அளவு இல்லை. இவ்வாறு பல பற்றாக்குறைகள் காணப்படும் நிலையில் நோய் பரவல் தீவிரமடைந்தால் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும்.

 சுப்பிரமணியம் நிஷாந்தன்

Wed, 03/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை