வடக்கின் போர்

மாபெரும் கிரிக்கெட் சமர் இன்று ஆரம்பம்

இரு கல்லூரிகள், அதனை கடந்து முழு யாழ்ப்பாணம் அதனையும் கடந்து புலம்பெயர்ந்து வாழும் இரு கல்லூரிகளின் பழைய மாணவர்கள் என அனைவரையும் யாழ்ப்பாணத்தின் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கும் "வடக்கின் போர்" மாபெரும் கிரிக்கெட் சமர் இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகிறது.

200 வருடங்கள் பழமையான யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபலமான இரண்டு பாடசாலைகளான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி இம் முறை 114 ஆவது ஆண்டாக நடைபெறவுள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இச் சமர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

போர் என்றால், உக்கிரமானது என்ற அர்த்தத்துக்கப்பால் கிரிக்கெட் இரசிகர்களின் கொண்டாட்ட திருவிழாவாக இது கொண்டாடப்படும்.

சென்.தோமஸ் -– றோயல் கல்லூரி அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் நீலங்களின் போர் கிரிக்கெட் சமரிற்கு அடுத்ததாக இலங்கையில், நீண்ட வரலாற்றினை தன்னகத்தே கொண்ட கிரிக்கெட் போட்டியாக வடக்கின் போர் உள்ளது.

1901 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த கிரிக்கெட் போட்டியானது இன்றைக்கு 113 போட்டிகளைக் கடந்து வந்துள்ளது. தவிர்க்க முடியாத காரணத்தால் சில போட்டிகள் நடைபெறவில்லை. இதுவரையில் நடைபெற்ற 113 போட்டிகளில் சென்.ஜோன்ஸ் கல்லூரி 36 போட்டிகளிலும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 28 போட்டிகளிலும் வெற்றிபெற்றன. 41 போட்டிகள் சமநிலையிலும், 7 போட்டிகளின் முடிவுகள் தெரியாத நிலையிலும், 1 போட்டி கைவிடப்பட்டும் உள்ளன. கடந்த 113 ஆவது வருடப் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. 2018 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 1 விக்கெட்டால் வெற்றிபெற்றிருந்தது.

அதற்கு முந்திய வருடம், சென்.ஜோன்ஸ் அணி, இனிங்ஸ் மற்றும் 7 ஓட்டங்களால் வெற்றியைப் பெற்று, 26 வருடங்களின் பின்னர் இனிங்ஸ் வெற்றியென்ற சாதனையையும் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி படைத்திருந்தது,

வடக்கின் போர் தான் கடந்து வந்த பாதையில் பல சாதனைகளையும் படைத்துவிட்டுத்தான் வந்தது. 1993 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 9 விக்கெட் இழப்புக்கு பெற்ற 354 ஓட்டங்கள் ஒரு இனிங்ஸில் பெற்ற அதிகூடிய ஓட்டமாகவுள்ளது.

சென்.ஜோன்ஸ் கல்லூரி 1999 ஆம் ஆண்டு 6 விக்கெட் இழப்புக்குப் பெற்ற 326 ஓட்டங்கள் அந்த அணியின் அதிகூடிய ஓட்டங்களாக இருக்கின்றது. வடக்கின் மாபெரும் சமரில், இதுவரையில் 20 சதங்கள் பெறப்பட்டுள்ளன. 1990 ஆம் ஆண்டு சென்.ஜோன்ஸ் கல்லூரி வீரன் எஸ்.சுரேஸ்குமார் பெற்ற 145 ஓட்டங்கள் அதிகூடிய தனிநபர் ஓட்டமாகவுள்ளது. 1951 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் வி.சண்முகம் 26 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்கள் கைப்பற்றினார். இது இதுவரையில் சிறந்த பந்துவீச்சு பரிதியாக இருக்கின்றது. 1950 ஆம் ஆண்டு சென்.ஜோன்ஸ் கல்லூரியை சேர்ந்த ஈ.ஜி.தேவநாயகம் 33 ஓட்டங்கள் கொடுத்து 9 விக்கெட்கள் கைப்பற்றியமை அந்த அணியின் சிறந்த பந்துவீச்சாகவுள்ளது.

1999 ஆம் ஆண்டு சென்.ஜோன்ஸ் அணியின் ஏ.ரி.கௌரிபாகன் - கே.பிரகாஸ் இணைந்து 4 ஆவது விக்கெட்டுக்காக பகிர்ந்த 200 ஓட்டங்கள் அதிகூடிய இணைப்பாட்டமாகவுள்ளது.

இம்முறை களமிறங்கும் அணிகளின் நிலை

சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி

சென்.ஜோன்ஸ் அணி, அந்தப் பருவத்தில் அதிகப்படியான போட்டிகளில் விளையாடி தம்மை பலப்படுத்துவதே அவர்களின் தனித்துவம். அதனை இந்த வருடமும் செய்துள்ளனர். அனுபவம் மிக்க நேர்த்தியான பயிற்றுவிப்பாளர் பத்மநாதன் லவேந்திராவின் பயிற்றுவிப்பின் கீழ் சென்.ஜோன்ஸ் அணி இம்முறை உருவாக்கப்பட்டுள்ளது.

சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி இந்தவருடம் விளையாடிய மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட போட்டிகளில்,

*வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியுடன், இனிங்ஸ் மற்றும் 79 ஓட்டங்களால் வெற்றி.

*மாத்தளை சென்.தோமஸ் அணியுடன் இனிங்ஸ் மற்றும் 19 ஓட்டங்களால் வெற்றி

*களுத்துறை திஸ்ஸ மத்திய கல்லூரியுடன் 65 ஓட்டங்களால் வெற்றி.

*கேகாலை வித்தியாலயத்துடன், 8 விக்கெட்டுகளால் வெற்றி.

*பிலியந்தலை மத்திய கல்லூரியுடன் 6 விக்கெட்டுகளால் வெற்றி.

இதனைவிட, அம்பாலங்கொடை பி.டி களுரத்ன கல்லூரி, பாதுக்க சிறி பியரத்ன மத்திய கல்லூரி, வத்தளை சென்.அன்ரனீஸ் கல்லூரி, கலஹெட்டியாவ மத்திய கல்லூரி ஆகிய அணிகளுடான போட்டியை சமநிலையில் முடித்திருந்தது.

சென்.ஜோன்ஸ் அணியினை

பலப்படுத்தும் நட்சத்திரங்களாக

நாகேந்திரராஜா சௌமியன் அணியின் தலைவராக செயற்படவுள்ளார். வலது கை துடுப்பாட்டம் மற்றும் வலது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் 5 வருடம் அனுபவம் கொண்டவர்.

தெய்வேந்திரம் டினோசன் உப தலைவராக அணியின் தலைவருடன் இணைந்து அணியை வழிநடத்தவுள்ள இவர் வலது கை துடுப்பாட்டம், வலது கை மிதவேக பந்துவீச்சாளராக 4 வருடம் அனுபவம் கொண்டவர்.

இவர்களுடன் கிறிஸ்டி பிரசன்ன தனுஜன், அன்ரன் செல்வதாஸ் சரண், தியாகராஜா வினோஜன், குகணேஸ்வரன் கரிசன், அன்ரனிப்பிள்ளை சுகிதன், சிவராஜா பிரணவன், அன்ரன் அபிசேக், கமலபாலன் சபேசன், யோகதாஸ் விதுசன், கஜேந்திரன் தமிழ்க்கதிர் அபிரஞ்சன், யோகதாஸ் சங்கீர்த்தனன், நேசகுமார் ஈவ்நேசியர் ஜேசியல், அண்டர்ஸன் சசின் கணபதி, சங்கீத கிறேம் ஸ்மித், ஜெயச்சந்திரன் அஸ்நாத், மகேந்திரன் கிந்துசன், ஜெகநாதன் ஞானரூபன் ஆகியோர் இவ் அணியில் இடம்பெறுகின்றனர்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 16 வருட கால பயிற்றுவிப்பு அனுபவம், அமைதியான, தனக்கான தனித்துவமான வழிகளை அமைத்து அதன் வழியில் வீரர்களை அவர்களின் திறன்களுக்கு ஏற்றவகையில் வழிநடத்துவதிலும், வீரர்களை பொறுப்புடன் வழிநடத்தக்கூடிய சிறந்த பயிற்றுநர் சந்திரமோனதாஸ் சுரேஸ்மோகனின் பயிற்றுவிப்பின் கீழ் களமிறங்குகின்றது. இவரின் பயிற்றுவிப்பில் அவ் அணி பல வெற்றிகளைச் சுவைத்துள்ளது. வடக்கின் போரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 2007 தொடக்கம் 2011 ஆம் ஆண்டு வரையில் வெற்றிகளை பெற்றதின் காரணகர்த்தாவே இவர் தான்.

இவ்வருடம் நடைபெற்ற போட்டிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பதிவுகள்,

*கொழும்பு வெஸ்லி கல்லூரியுடனான போட்டியில் இனிங்ஸ் மற்றும் 121 ஓட்டங்களால் வெற்றி.

*சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியுடனான போட்டியில் 500 ஓட்டங்களால் வெற்றி.

*மாத்தளை விஜயா கல்லூரியுடன், 143 ஓட்டங்களால் வெற்றி.

*கண்டி அசார் கல்லூரியுடன், இனிங்ஸ் மற்றும் 308 ஓட்டங்களால் வெற்றி.

*பெந்தோட்ட மத்திய கல்லூரியுடன், 121 ஓட்டங்களால் வெற்றி.

*பொலநறுவை றோயல் கல்லூரியுடன் இனிங்ஸ் மற்றும் 148 ஓட்டங்களால் வெற்றி.

*சேர் ஜோன் கொத்தலாவ கல்லூரியுடன், இனிங்ஸ் மற்றும் 3 ஓட்டங்களால் வெற்றி.

*மாரவில சென்.சேவியர் கல்லூரியுடன் இனிங்ஸ் மற்றும் 348 ஓட்டங்களால் வெற்றி.

*வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியுடன் இனிங்ஸ் மற்றும் 266 ஓட்டங்களால் வெற்றி.

இதனைவிட மொறட்டுவ மத்திய கல்லூரி, தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி, இக்பாகமுவ மத்திய கல்லூரி ஆகியவற்றுடன் போட்டிகளை சமப்படுத்தியதுடன், எந்தவொரு போட்டியிலும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி தோல்வியடையவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை

அலங்கரிக்கப் போகும் நட்சத்திரங்கள்,

வி.விஜஸ்காந்த் அணியின் தலைவரான இவர் வலது கை துடுப்பாட்டம், வலது கை லெக்ஸ் பின்னராக காணப்படுவதுடன் 3 வருடகால அனுபவம் மிக்கவர். 19 வயதுப்பிரிவு இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்த ஒரு உன்னதமான வீரர்.

இந்தியா, பங்களாதேஸ் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுடான போட்டியில் அணியில் இடம்பிடித்திருந்தார். சுற்றுப்போட்டியில் பங்குபற்றியிருந்தார். சுப்பர் புறவின்ஸ் அணியிலும் இடம்பிடித்திருந்த இவர் வடமாகாண 19 மற்றும் 23 வயதுப் பிரிவு அணிகளிலும் இடம்பிடித்திருந்தார்.

கடந்த வடக்கின் மாபெரும் போரில் சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதைப் பெற்றிருந்தார். கே.இயலரசன் தலைவருடன் இணைந்து அணியை வழிநடத்தவுள்ள இவர் வலது கை துடுப்பாட்டம், வலது மிக மிதவேகப் பந்துவீச்சாளராக 4 வருடகால அனுபவம் கொண்டவர். வடமாகாண 19 வயதுப்பிரிவு அணியில் இடம்பிடித்துள்ளார்.

இந்தவருடம், ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணிக்கு எதிராக சதமடித்ததுடன், கடந்த வடக்கின் போரில் சிறந்த சகலதுறை வீரருக்கான விருதைப் பெற்றுக்கொண்டார். இவர்களுடன் ஆர்.ராஜ்கிளிண்டன், ரி.விதுசன், எஸ்.சாரங்கன், எம்.சஞ்சயன், ரி.கௌதமன், என்.திவாகரன், ஏ.நிதுசன், கே.பிரவீன்ராஜ், பி.இந்துஜன், ரி.லுபியன், பி.ஏ.கஜன், ஜெ.விதுசன், எஸ்.அபியுத், வி.கவிதர்ஸன், ஜி.ஜனுஜன், ஆர்.நியூட்டன், எஸ்.சிமில்ரன், என்.அஜய் ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.

(யாழ்ப்பாணம் விளையாட்டு நிருபர்)

Thu, 03/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை