கொரோனா வைரஸ்: இத்தாலியில் உயிரிழப்பு வேகமாக அதிகரிப்பு

சீனா, தென் கொரியாவில் வீழ்ச்சி

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரே நாளில் 133 பேர் உயிரிழந்து அந்நாட்டின் உயிரிழப்பு எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோன்று நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கையும் 25 வீதத்தால் உயர்ந்து 5,883 இல் இருந்து 7,375 ஆக அதிகரித்திருப்பதாக அந்நாட்டின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வைரஸை கட்டுப்படுத்தும் கடும் நடவடிக்கையாக மில்லியன் கணக்கான மக்களை தனிமைப் படுத்தும் திட்டத்தை இத்தாலி அரசாங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமுல் படுத்திய நிலையிலேயே தொடர்ந்தும் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.

லொபார்டி மற்றும் 14 மாகாணங்களில் உள்ள 16 மில்லியன் வரையான மக்கள் பயணம் மேற்கொள்வதற்கு சிறப்பு அனுமதி பெற வேண்டிய கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.

அதேபோன்று பாடசாலைகள், உடற்பயிற்சி மையங்கள், அருங்காட்சியகங்கள், இரவு விடுதிகள் மற்றும் நாடெங்கும் ஏனைய இடங்களை மூடும் திட்டத்தையும் இத்தாலி பிரதமர் கியுசெப்பே கொன்டே வெளியிட்டுள்ளார்.

இந்தக் கட்டுப்பாடுகள் ஏப்ரல் 3 வரை நீடிக்கவுள்ளது.

இந்த புதிய வைரஸ் தொற்று எண்ணிக்கையின்படி சீனாவுக்கு வெளியில் அதிக நோய்ப் பாதிப்பு உள்ள நாடாக இத்தாலி மாறியுள்ளது. தென் கொரியாவை விஞ்சி இத்தாலியில் அதிக வைரஸ் தொற்று சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. தென் கொரியாவில் 7,400 க்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

உலகில் அதிக வயது முதிர்ந்தவர்கள் உள்ள நாடுகளில் ஒன்றாக இத்தாலி உள்ளது. இந்த வைரஸ் குறிப்பாக வயது முதிர்ந்தவர்களுக்கே ஆபத்தானது என்பதோடு வயதானவர்களின் சுகாதார நிலை இதற்குக் காரணமாகும்.

இத்தாலியில் புதிதாக வைரஸ் தொற்றியவர்களில் இத்தாலியின் இராணுவத் தலைமை அதிகாரி சல்வடோர் பரினாவும் அடங்குகிறார். தாம் நல்ல நிலையில் இருப்பதாகவும் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமுல்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் நடவடிக்கையால் இத்தாலி மக்கள் தொகையில் கால் பகுதியினர் பாதிக்கப்பட்டிருப்பதோடு நாட்டின் பொருளாதார பலம் கொண்ட வடக்கு பிராந்தியமே பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

10 மில்லியன் மக்கள் வசிக்கும் வடக்கு பிராந்தியமான லொம்பார்டியில் சுகாதார கட்டமைப்பு பெரும் அழுத்தத்திற்கு முகம்கொடுத்திருப்பதோடு அங்கு மருத்துவமனை நடைக்கூடங்களிலும் மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனினும் இந்தக் கட்டுப்பாடுகள் மூலம் இத்தாலி நேர்மையான அர்ப்பணிப்பைச் செய்திருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசுஸ் பாராட்டியுள்ளார்.

சீனாவில் பெரும் வீழ்ச்சி

எவ்வாறாயினும் கடந்த டிசம்பர் மாதம் இந்த வைரஸ் தோன்றிய சீனாவில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் பெரும் முன்னெற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸின் மையப்புள்ளியாக இருக்கும் ஹுபெய் மாகாணத்திற்கு வெளியில் சீன பெருநிலப் பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் உள்நாட்டில் பரவும் எந்த ஒரு வைரஸ் தொற்று சம்பவமும் பதிவாகவில்லை.

கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிதாக 40 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அதற்கு முந்திய தினத்தில் பதிவான 44 வைரஸ் தொற்று சம்பவங்களை விடவும் குறைவாகும். கடந்த ஜனவரி 20 ஆம் திகதி வைரஸ் தொற்று தொடர்பில் தேசிய அளவில் தரவுகளை வெளியிட ஆரம்பித்தது தொடக்கம் இந்த எண்ணிக்கை மிகக் குறைவானதாகவும் உள்ளது.

இதில் ஞாயிற்றுக்கிழமை பதிவான வைரஸ் தொற்று சம்பவங்களில் 36 சம்பவங்கள் ஹபெய் தலைநகர் வூஹானில் பதிவாகி இருப்பதோடு எஞ்சிய நான்கு வைரஸ் சம்பவங்கள் குவான்சு மாகாணத்தில் பாதிவானபோதும் அவை ஈரானில் இருந்து வந்த நோய்த் தொற்று சம்பவங்களாகும்.

இதன்படி சீனாவில் வெளிநாட்டில் இருந்து வந்த கொரோனா தொற்று சம்பவங்கள் 67 பதிவாகியுள்ளன.

சீனாவில் இந்த வைரஸினால் மேலும் 22 பேர் உயிரிழந்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,119 ஆக அதிகரித்துள்ளது.

எனினும் சீனப் பெரு நிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட மொத்தம் 80,735 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 58,600 நோயாளிகள் சுகம் பெற்று வீடுகளுக்கு திரும்பியிருப்பதாக சீனா மருத்துவமனைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டன. இதன்படி 19,000 பேர் வரை தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. எனினும் உள்நாட்டில் வைரஸ் பரவும் வேகம் அண்மைய நாட்களில் குறைந்துள்ளது.

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வைரஸ் தொற்று வருவதை தடுப்பதில் சீன நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனாவுக்கு வெளியில் கொரோனா வைரஸினால் 500 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

99 நாடுகளில் பாதிப்பு

கொவிட்–19 என்று பெயரிடப்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் 99 நாடுகளில் 110,000 பேருக்கு தொற்றியிருப்பதோடு உலகெங்கும் 3500க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

சீனா மற்றும் இத்தாலி நாடுகளை அடுத்து இந்த வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக ஈரான் மற்றும் தென் கொரியா உள்ளன. எனினும் தென் கொரியாவில் வைரஸ் பரவல் மெதுவடைந்துள்ளது.

தென் கொரியாவில் நேற்று 99 புதிய கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு இதன்மூலம் அந்நாட்டில் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,478 ஆக உயர்ந்துள்ளது என்பதை நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான கொரிய மையம் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸினால் 194 பேர் உயிரிழந்திருப்பதோடு 6,566 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதாக ஈரான் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் இந்த எண்ணிக்கை உத்தியோகபூர்வ அறிவிப்புகளை விடவும் அதிகமாக இருக்கலாம் என்று பரவலாக சந்தேகங்கள் எழுந்துள்ளன.

ஈரானை மையமாகக் கொண்டு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இந்த வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. எனினும் 60 வயதான ஜெர்மன் நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் கொரானா வைரஸினால் உயிரிழந்திருப்பதன் மூலம் எகிப்தில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

சவூதி அரேபியாவில் புதிதாக நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி இருக்கும் நிலையில் அந்நாட்டில் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் சவூதி அரேபியாவின் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள கிழக்கில் காதிப் பிராந்தியத்தை தற்காலிகமாக நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து துண்டிப்பதற்கு சவூதி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கட்டாரில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில் 14 நாடுகளின் பயணிகள் நாட்டுக்குள் வருவதற்கு கட்டார் தற்காலிக தடை விதித்துள்ளது. பங்களாதேஷ், சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், ஈராக், லெபனான், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென் கொரியா, இலங்கை, சிரியா மற்றும் தாய்லாந்து நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் இந்த வைரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே பர ஆரம்பித்துள்ளது. அந்நாட்டு தேசிய சட்டமன்றத்தின் மேலும் இருவருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக உத்தியோகபூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோன்று பிரான்சில் வைரஸ் தொற்று சம்பவம் 19 வீதம் உயர்ந்து 1,126 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலிக்கு அடுத்து இந்த வைரஸினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக பிரான்ஸ் உள்ளது. 1000க்கும் அதிகமானவர்கள் பங்கேற்கும் ஒன்றுகூடல்களுக்கு பிரான்ஸ் அரசு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் 50 மாநிலங்கில் 30 இல் 500க்கும் அதிகமானவர்களுக்கு கொவிட்–19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு 21 பேர் உயிரிழந்துள்ளனர். தவிர, ஜெர்மனி (939), ஸ்பெயின் (589), பிரிட்டன் (273) மற்றும் நெதர்லாந்து (265) நாடுகளிரும் வைரஸ் தொற்று சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

***********

கொரோனா வைரஸிலிருந்து மீண்ட 100 வயது முதியவர்

சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 100 வயது முதியவர் சிகிச்சைக்குப் பின்னர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

பெப்ரவரி 24 ஆம் திகதி ஹுபே நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த முதியவருக்கு கொரானா தாக்குதல் தவிர, அல்சைமர் நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சினைகள் போன்றவையும் இருந்துள்ளன.

தொடர்ந்து 13 நாட்களாக வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், பிளாஸ்மா மாற்றங்கள் மற்றும் பாரம்பரிய சீன மருத்துவம் போன்றவற்றால் கண்காணிக்கப்பட்ட அவர் கடந்த சனிக்கிழமை அன்று முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதனால் கொரோனா வைரஸை வென்ற அதிக வயதானவர் என குறிப்பிட்டு அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Tue, 03/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை