மக்களை பாதுகாக்கும் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழையுங்கள்

ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் சிந்திக்க வேணடும்

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவர்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை கொரோனா சிகிச்சை பிரிவாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், இது தொடர்பாக நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், அரசாங்கத்தால் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தென்கொரியா,இத்தாலி மற்றும் ஈரானிலிருந்து வருகை தருபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிப்புக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டது.

அதற்கமையவே புணானை மற்றும் கந்தக்காடு ஆகிய பிரதேசங்களில் மருத்துவ சோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டன. இந்த நாடுகளிலிருந்து வருகை தருகின்ற இலங்கையர்களும் வெளிநாட்டவர்களும் இவ்விரு சோதனை நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 24 பேர் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். ஏனையோர் விஷேட பஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். இலங்கையில் வாழும் ஏனைய மக்களின் நலன் கருதியே இவ்வாறானதொரு நடவடிக்கையை எடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தது.

எனினும் வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவரும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக நாம் கருதவில்லை.

வருகை தரும் அனைவரும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படுவது ஏனைய மக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டேயாகும்.

சுப்பிரமணியம் நிஷாந்தன் 

 

Thu, 03/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை