கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நாடுகளிலிருந்து வருவோரை தனிமைப்படுத்தும் திட்டம் ஆரம்பம்

இத்தாலி, ஈரான், தென்கொரியா தவிர ஏனைய நாடுகளில் இருந்து வருவோரை வீடுகளில் தங்க வைக்க அரசு பணிப்பு

இத்தாலி, தென் கொரியா மற்றும் ஈரான் ஆகிய மூன்று நாடுகளைத் தவிர்ந்து ஏனைய நாடுகளிலிருந்து வருகை தருவோர் 14 நாட்களுக்கு தங்களது வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நாடுகளில் இருந்து வருகைதரும் இலங்கையர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம், புணானை கந்தக்காடு மத்திய நிலையம் ஆகியன நேற்று முதல் கண்காணிக்கும் மத்திய நிலையங்களாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க இதுதொடர்பில் கருத்து வெளியிடுகையில், இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் இருந்து வரும் இலங்கையர்களை குறித்த புனர்வாழ்வு மத்திய நிலையங்களில் தங்கவைக்கும் செயற்பாடு நேற்றுமுதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தற்போது வெளிநாடுகளில் இருந்து வருகை தந்துள்ள சுமார் இரண்டாயிரம் பேர் வரையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இத்தாலி, தென் கொரியா மற்றும் ஈரான் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து வருபவர்கள் 14 நாட்களுக்கு தனிமையில் இருக்க வேண்டும்.

இதற்கென விமான நிலையத்தில் நேற்றுமுதல் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

உலகெங்கும் 97 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 3825 ஆக உயர்ந்துள்ளது. உலகெங்கும் 110,034 பேருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 21 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 547 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிக பாதிப்பு உள்ள நியூயோர்க்கில் மருத்துவ அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. நேற்றுமுன்தினம் மாத்திரம் புதிதாக 1,247 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதை அடுத்து வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7375 ஆக உயர்ந்தது.

இத்தாலியில் 366 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 6.05 கோடி மக்கள் தொகை உடைய இத்தாலியின் பெரும்பாலான பகுதிகளில் வைரஸ் பாதிப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், நாட்டின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதேபோல், இத்தாலியில், அருங்காட்சியகங்கள், திரையரங்குகள் உட்பட, பொழுதுபோக்கு மையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

பாடசாலைகள், கல்லூரிகள் ஆகியவையும் மூடப்பட்டுள்ளன. வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கும்படி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, தென் அமெரிக்க நாடான பராகுவேயில், நேற்று முதல் வைரஸ் பாதிப்பு பதிவானது.

அண்டை நாடான ஈக்குவடாரில் இருந்து வந்தவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈக்குவடாரில் 14 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது.

மற்றொரு தென் அமெரிக்க நாடான ஆர்ஜென்டினாவிலும் ஒருவர் இறந்துள்ளமை பதிவாகியுள்ளது. மேற்காசிய நாடான ஈரானில் இதுவரை 194 பேர் உயிரிழந்துள்ளனர்.

இங்கு, 6,566 பேருக்கு வைரஸ் தொற்றியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று சவூதி, கட்டார், குவைத் உட்பட பல நாடுகளில் வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Tue, 03/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை